/indian-express-tamil/media/media_files/2026/07/05/tambaram-2026-07-05-10-57-25.jpg)
41 மின்சார ரயில் சேவை ரத்து: தாம்பரத்தில் ஸ்தம்பித்த பயணிகள் கூட்டம்; 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில்வே வழித் தடத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் மின்சாரப் பணிகள் காரணமாக, இன்று (ஜூலை 5) மற்றும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) ஆகிய 2 தினங்களிலும் புறநகர் மின்சார ரயில் சேவைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
41 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து
ரயில் பாதையில் அவசர கால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று காலை 10:30 முதல் மதியம் 3:30 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 2 மார்க்கங்களிலும் இயக்கப்படும் 41 புறநகர் மின்சார ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே போன்ற பராமரிப்புப் பணி அடுத்த ஞாயிற்றுக்கிழமையான ஜூலை 12ஆம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தாம்பரத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
ரயில் சேவை ரத்து குறித்த முன்னறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், தங்களின் அவசரப் பயணங்களை 10:30 மணிக்கு முன்பாகவே முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆயிரக்கணக்கான பயணிகள் காலை 10-க்கு முன்பாகவே தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் பல்லாவரம் ரயில் நிலையங்களில் திரண்டனர். ஒரே நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக பெருந்திரளான மக்கள் கூடியதால், டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் நடைமேடைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் தாம்பரம் ரயில் நிலையம் கடுமையான நெரிசலுடன் பரபரப்பாகக் காணப்பட்டது. பயணிகளின் சிரமத்தைக் குறைக்க தெற்கு ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் சில முக்கிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் திருமால்பூருக்கு காலை 11:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூரிலிருந்து தாம்பரத்திற்கு காலை 9:30 மணி முதல் மதியம் 1:50 மணி வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
50 கூடுதல் பேருந்துகள்
ரயில் சேவை இல்லாததால் ஏற்படும் பாதிப்பைச் சரிசெய்ய, சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) இயக்கி வருகிறது. முக்கிய அறிவிப்பு: மதியம் 3:30 மணிக்கு மேல் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் மின்சார ரயில் சேவைகள் மீண்டும் வழக்கம்போல் தடையின்றி இயங்கும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-local-train-alert-41-suburban-trains-cancelled-today-between-beach-and-tambaram-50-mtc-special-buses-deployed-12135274





