ஒரே இரவில் 2 கப்பல்கள் காலி 6 7 2026
/indian-express-tamil/media/media_files/2026/07/07/ship-2026-07-07-08-55-11.jpg)
ஈரானில் 125 நாட்களுக்கு பிறகு மறைந்த உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உடலில் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இவரது உடல் வரும் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், ஈரான் பாதுகாப்பு படையினர் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளனர். அமெரிக்க அதிகாரிகளின் தகவல்படி, திங்கள்கிழமை இரவு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற வணிகக் கப்பல்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் 2 ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதல்களை நிறுத்துவதற்காக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டிருந்த ஒரு வார காலத் தற்காலிக ஒப்பந்தம் காலாவதியானதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருந்த சுமுகமான சூழல் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான வணிக கப்பல்கள்
பிரிட்டனின் கடல்சார் வர்த்தகச் செயல்பாட்டு முகமை தகவல் படி, ஓமன் கடற்கரைக்கு அருகே தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு எண்ணெய் டேங்கர் கப்பலின் இடது பக்கத்தில் ஏவுகணை தாக்கியதில் கப்பலில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுதவிர, மற்றொரு வணிகக் கப்பல் மீதும் ஈரானின் ஏவுகணை தாக்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு கப்பல்களும் சேதமடைந்திருந்தாலும் மாலுமிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஈரானில் போர் பதற்றத்தைக் குறைப்பதற்காக அமெரிக்காவும் தெஹ்ரானும் 14 அம்ச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில வாரங்களிலேயே இந்தத் தாக்குதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
முறிந்த பேச்சுவார்த்தை
கடந்த வாரம் தோஹாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தையில், ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சனை குறித்து எந்தவொரு முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்று 'ஆக்சியோஸ்' (Axios) ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் இந்த ஜலசந்தியை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது.
ஈரான் அதிகாரிகள் அனுமதித்த பாதைகள் வழியாகச் செல்வதற்குக் கப்பல் மாலுமிகள் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்றும் ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஞாயிற்றுக் கிழமை அன்று ஓமன் நாட்டுப் பாதையை முற்றுகையிடுவதற்காகத் தங்களின் ரோந்துப் படகுகளை அனுப்பியதாக ஈரானின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.





