/indian-express-tamil/media/media_files/2026/01/15/kudankulam-nuclear-power-plant-2026-01-15-06-15-08.jpg)
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், வெளிநாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அணு உலையின் கண்டன்சர் குளிரூட்டும் நீர் இறைப்பானில் ஏற்பட்ட பழுது மற்றும் ஜெனரேட்டர் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு ஆகியவையே இந்த மின் உற்பத்தி நிறுத்தத்திற்குக் காரணமாகும்.
இரண்டு அணு உலைகளிலிருந்தும் மொத்தமாக 1152 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைத்து வந்த நிலையில், இந்த அணு உலையில் ஏற்பட்டுள்ள பழுதின் விளைவாக, தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 562 முதல் 576 மெகாவாட் வரையிலான மின்சாரம் தடைப்பட்டு, அதனைப் பெறுவதில் தற்காலிகச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒரு நாள் மின்சாரத் தேவை 19 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வருகிறது. தற்பொழுது கோடைக்காலத்தில் மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதன் காரணமாக, நாள் ஒன்றிற்கான மின்சாரத் தேவை 21,000 மெகாவாட்டை எட்ட இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. இத்தகைய சூழலில், கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளது ஒரு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அணு உலையில் ஏற்பட்டுள்ள இந்தப் பழுதை விரைந்து சரிசெய்யும் பணிகளில் கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/kudankulam-nuclear-power-plant-malfunction-and-power-supply-disruption-12135318





