/indian-express-tamil/media/media_files/2026/06/30/dubai-2026-06-30-20-38-05.jpg)
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தூதரகத் துணை அலுவலகம் மூலம் வழங்கப்படும் வழக்கமான பாஸ்போர்ட், விசா மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தத் தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இந்தியத் தூதரகத் துணை அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வழக்கமான பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகள் ஜூலை 1-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் மிகவும் அவசரமான தூதரகச் சேவைகள் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகம் முழுவதும் இந்தியர்களுக்கான பாஸ்போர்ட், விசா மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு சேவைகளை அவுட்சோர்சிங் (Outsourced) முறையில் வழங்கி வரும் பொறுப்பை, 'அல்ஹிந்த் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்' (Alhind Tours and Travel LLC) நிறுவனம் ஜூலை 1 முதல் அதிகாரப்பூர்வமாகத் தன் வசம் எடுக்கிறது.
இந்த அதிரடி நிர்வாக மாற்றத்தின் காரணமாக, இதுவரை இந்தச் சேவைகளை வழங்கி வந்த 'பி.எல்,எஸ் இன்டர்நேஷனல்' (BLS International) மற்றும் 'எஸ்.ஜி.ஐ.வி.எஸ் குளோபல்' (SGIVS Global) ஆகிய நிறுவனங்கள், கடந்த ஜூன் 25-ஆம் தேதியோடு புதிய விண்ணப்பங்களைப் பெறுவதை நிறுத்திக் கொண்டன. முன்னதாக ஜூன் 26 முதல் ஜூன் 30 வரை 5 நாட்களுக்கு மட்டுமே இந்தச் சேவைகள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக (இந்தத் தடை ஜூலை 1-ஆம் தேதி வரை மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவசர உதவிக்கு யாரைத் தொடர்பு கொள்வது?
இந்தக் காலகட்டத்தில் பாஸ்போர்ட் அல்லது விசா தொடர்பாக ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டால், அமீரக வாழ் இந்தியர்கள் பின்வரும் வழிகளில் தூதரகத்தை உடனே தொடர்பு கொள்ளலாம்.
டோல் - ப்ரீ எண்: 800 46342 (800 INDIA)
வாட்ஸ்அப் எண்: +971 54 309 0571
மின்னஞ்சல் (Email): pbsk.dubai@mea.gov.in
டூரிஸ்டுகள் நோட் பண்ணுங்க
ஜூலை 2-ஆம் தேதி முதல் வழக்கமான சேவைகள் எப்படிச் செயல்படும் என்பது குறித்த முழு விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதுவரை வதந்திகளை நம்பாமல், தூதரகத்தின் சமூக ஊடகப் பக்கங்களை கவனிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/international/indian-embassy-in-uae-extends-passport-visa-services-suspension-till-this-date-12121374





