புதன், 8 ஜூலை, 2026

ட 5 போக்குவரத்துக் கழக டெண்டர்கள் ரத்து

 

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, முந்தைய தி.மு.க ஆட்சிக்கால ஒப்பந்தங்கள் தீவிர மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சென்னை மாநகராட்சி நடைபாதை ஒப்பந்தங்கள் மற்றும் மின்சாரப் பேருந்து டெண்டர்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாகத் தற்போது போக்குவரத்துத் துறையில் கோரப்பட்டிருந்த மேலும் 5 முக்கிய டெண்டர்களைப் போக்குவரத்துத் துறை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நிர்வாக மேம்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய டெண்டர்கள் கோரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளிலும் முந்தைய தி.மு.க ஆட்சிக்காலத்தில் இறுதி செய்யப்பட்ட திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தீவிர மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, அந்தந்த துறை அமைச்சர்கள் தங்களது துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, முந்தைய ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை அதிகாரிகள் முறைப்படி ஆய்வு செய்து அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட சில முக்கிய டெண்டர்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. முன்னதாக, சென்னை மாநகராட்சி சார்பில் அடையாறு, பெசன்ட் நகர், பெரியமேடு, கீழ்ப்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதைகள் அமைப்பதற்காக விடப்பட்ட ரூ. 284 கோடி மதிப்பிலான 35 டெண்டர்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. இதேபோல், தமிழகத்திற்கு 500 புதிய மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக வெளியிடப்பட்டிருந்த டெண்டரையும் தவெக அரசு அண்மையில் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்திற்காக முந்தைய ஆட்சியில் வெளியிடப்பட்டிருந்த மேலும் 5 முக்கிய டெண்டர்களை போக்குவரத்துத் துறை ரத்து செய்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, போக்குவரத்துக் கழகங்களுக்கு 60,000 புதிய டயர்கள் வாங்குவதற்கான டெண்டர், மினி பேருந்துகளுக்கான அடிச்சட்டம் (Chassis) கொள்முதல் செய்யும் டெண்டர் மற்றும் மினி பேருந்துகளுக்குக் கூண்டு (Body Building) கட்டும் பணிக்கான ஒப்பந்தங்கள் ஆகியவை இதில் அடங்கும். மேலும், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் வாகன இருப்பிடத்தைக் கண்டறியும் வி.எல்.டி.டி. (V.L.T.D.) கருவி மற்றும் அவசரக்காலப் பொத்தான்களை (Panic Buttons) பொருத்துவதற்காகக் கோரப்பட்டிருந்த டெண்டரும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முந்தைய தி.மு.க ஆட்சிக் காலத்தின் டெண்டர்களைத் தற்போதைய புதிய அரசு தொடர்ந்து மறுபரிசீலனை செய்து வரும் சூழலில், போக்குவரத்துத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள இந்த 5 முக்கியப் பணிகளுக்கும், முறைகேடுகள் ஏதுமின்றி வெளிப்படைத்தன்மையுடன் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, மிக விரைவில் புதிய டெண்டர்கள் மீண்டும் முறைப்படி அறிவிக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

7 7 2026 

source https://tamil.indianexpress.com/tamilnadu/tvk-govt-cancels-five-transport-department-tenders-dmk-regime-12143796