4 7 2026
மயிலாடுதுறையில் காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான தனிச்சட்டம் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து புதிய தலைமுறை ஊடகத்திற்கு 'எவிடன்ஸ்' அமைப்பின் இயக்குநர் கதிர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். ஆணவப் படுகொலை தடுப்புக்கான தனிச்சட்டத்தைக் கொண்டு வருவதில் அமைச்சர் வன்னியரசு மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட கதிர், முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்:
ஆண்டாண்டு காலமாக ஆணவக் கொலைகளுக்கு எதிராகப் பல்வேறு மேடைகளில் குரல் கொடுத்து வரும் அமைச்சர் வன்னியரசு, தனிப்பட்ட முறையிலும் இந்தச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். மற்ற அமைச்சர்களைவிட மிக வெளிப்படையாக இதைப் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். எந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் வந்தாலும் இந்த விவகாரத்தில் குரல் கொடுப்பேன் என்று அமைச்சர் வன்னியரசு கூறியிருந்தார். ஆனால், அதற்கான அரசியல் சூழலோ? தேவையான ஆதரவோ அவருக்குக் கிடைத்ததா என்பது தெரியவில்லை. எனக்குக் கிடைத்த தகவலின்படி, ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற அமைச்சர் வன்னியரசின் முயற்சிக்கு, தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்குள்ளேயே முழுமையான உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும், அமைச்சர் வன்னியரசு பேசுவது அவரது தனிப்பட்ட கருத்து அல்ல, அது ஒட்டுமொத்த தமிழகத்தின் குரல் என்று கூறிய கதிர், சாதியின் பெயரால் உயிர்கள் பறிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு எந்தத் தயக்கமும் இன்றி உடனடியாகத் தனிச்சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். மயிலாடுதுறை காதல் ஜோடி உயிரிழப்பு வழக்கில் காவல்துறையின் அணுகுமுறை குறித்து கதிர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். காதல் ஜோடி இருவரும் தாக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த மரணத்தின் பின்னணியில் இருந்த சாதி-சமூக அழுத்தங்கள்தான் விசாரணையின் மையமாக இருந்திருக்க வேண்டும். இந்த வழக்கில் கொலைக்கான ஆதாரங்கள் தற்போது குறைவாக இருந்தாலும், 'தற்கொலைக்குத் தூண்டுதல்' என்ற கோணத்தில் வழக்கை வலுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இதனை வெறும் தற்கொலையாக மட்டுமே அணுகியுள்ளனர். இந்த அணுகுமுறையால் வெளிப்புறக் காரணங்கள் மறைக்கப்பட்டு, உயிரிழந்த இருவரே தங்களது மரணத்திற்குக் காரணம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த வழக்கின் மிகப்பெரிய குறைபாடாகும்.
சமாதானக் கூட்டத்தில் கேட்கப்பட்ட எப்.ஐ.ஆர். நகல், உடற்கூறு ஆய்வு அறிக்கை, நிவாரணம், அரசு வேலை, வீட்டுமனை ஆகியவை சட்டப்படி வழங்கப்பட வேண்டிய நடைமுறைகளே தவிர, அவை வழக்கின் அடிப்படை திசை மாற்றும் கோரிக்கைகள் அல்ல என்றும், 'தற்கொலைக்குத் தூண்டுதல்' என்பதில் உறுதியாக இருந்திருந்தால் வழக்கின் போக்கே மாறியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதில் அரசின் செயல்பாடு மட்டும் போதாது; காவல்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும்.
ஆணவக் கொலை வழக்குகளை விசாரிப்பது குறித்து காவல்துறையினரிடம் இன்னும் போதிய புரிதல் இல்லை. சமூகநீதி, அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகள் மற்றும் வழக்குகளை எவ்வாறு விசாரிக்க வேண்டும் என்பது குறித்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி காவல்துறைக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். பருவ வயதில் ஈர்ப்பும் காதலும் இயல்பானவை. ஆனால் அதைக் கையாளும் மனப்பக்குவம், உளவியல் வழிகாட்டுதல் போன்றவை பள்ளி, கல்லூரி மற்றும் குடும்பங்களில் போதுமான அளவில் இல்லை. இதற்காகத் திட்டமிட்ட ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு கொண்டு வர வேண்டும்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/internal-clash-in-tvk-government-disagrees-with-minister-vanniarasus-anti-honor-killing-law-claims-evidence-kathir-12133483





