புதன், 1 ஜூலை, 2026

திருச்சியில் நிலுவைத் தொகை வழங்க ரூ.30,000 லஞ்சம்

 


New Project

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர், முசிறி அருகே உள்ள தண்டலைபுத்தூர் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், திருச்சி மாவட்ட கல்வி அலுவலராகவும் (பொறுப்பு) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக தேவி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருடைய வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றது தொடர்பான நிலுவைத் தொகை பில் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி, தேவியின் கணவரும் முன்னாள் ஆசிரியருமான இளமுருகு, மாவட்ட கல்வி அதிகாரி புகழேந்தியைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். அப்போது, வருடாந்திர ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமானால், அதற்குப் புகழேந்தி 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆசிரியர் இளமுருகு, இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினர் இணைந்து ஒரு பொறிவைப்பு (டிராப்) நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அதன்படி, நேற்று இரவு திருச்சி பழைய கலெக்டர் அலுவலக பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில், ரசாயனம் தடவிய 30,000 ரூபாய் லஞ்சப் பணத்தை இளமுருகுவிடமிருந்து புகழேந்தி கேட்டுப் பெற்றார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புகழேந்தியை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திலும், புகழேந்தியின் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

1 7 2026 

source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-district-educational-officer-arrested-for-demanding-bribe-to-approve-teachers-arrear-bills-12122214