/indian-express-tamil/media/media_files/2026/07/04/dmk-aiadmk-complains-to-tn-governor-rajendra-vishwanath-arlekar-tvk-govt-horse-trading-tamil-news-2026-07-04-18-23-02.jpg)
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க புகார் மனுக்களை அளித்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. எம்.பி.வில்சன், தி.மு.க. சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் ஆகியோர் புகார் மனு அளித்தனர். இதேபோல், அ.தி.மு.க கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.பி இன்பதுரை ஆகியோர் த.வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக மனு அளித்தனர்.
தி.மு.க பரபர புகார்
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்தனர். த.வெ.க. வெளிப்படையாக குதிரை பேரம் நடத்துவதாக ஆளுநரிடம் புகார் அளித்தனர். மேலும், தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளனர்.
ஆளுநரிடம் புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "த.வெ.க அரசு குதிரைபேரம் செய்து வருகிறது. இது தொடர்பான புகார்களை முழுமையாக விசாரித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனிதா ராதாகிருஷ்ணனை 5 மணி நேரம் போலீசார் துன்புறுத்தியுள்ளனர். அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது த.வெ.க அரசு. தி.மு.க. ஆட்சியில் அவதூறு வழக்குகளுக்கு எல்லாம் யாரையும் கைது செய்ததில்லை. முதலமைச்சர் விஜய் முன்னிலையிலேயே அதிகாரிகளுக்கு தனி நபர்கள் உத்தரவு போடுகின்றனர்.
த.வெ.க குதிரை பேரம் செய்து வருவதாக ஆளுநரிடம் புகார் அளித்தோம். ரூ.50 கோடி தருவதாகக் கூறி வேப்பனஹள்ளி தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவாசனிடமும் குதிரை பேரம் நடத்தியது த.வெ.க. நீங்கள் இளைஞர், த.வெ.க-வுக்கு வாருங்கள் என சீனிவாசனை அழைத்துள்ளனர். நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஆஸ்டினிடம் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தால் அமைச்சரவை தருவதாக கூறி இருக்கின்றனர். த.வெ.க-வில் சமீபத்தில் இணைந்த சி.விஜயபாஸ்கரும் குதிரை பேரம் செய்கிறார். இதுதொடர்பாக ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம்" என்று தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-aiadmk-complains-to-tn-governor-rajendra-vishwanath-arlekar-tvk-govt-horse-trading-tamil-news-12133943





