வெள்ளி, 3 ஜூலை, 2026

விசா ஆன் அரைவல்' கொள்கையில் அமீரக அரசு அதிரடியான முக்கிய மாற்றம் ஒன்றை அறிவித்துள்ளது.

 

uae

இந்தியாவில் இருந்து, குறிப்பாகத் தென்னிந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான 'விசா ஆன் அரைவல்' (Visa-on-Arrival) கொள்கையில் அமீரக அரசு அதிரடியான முக்கிய மாற்றம் ஒன்றை அறிவித்துள்ளது.

யாருக்கு இனி 'விசா ஆன் அரைவல்' கிடைக்காது?

புதிய விதிகளின்படி, பிரிட்டன் குடியிருப்பு விசா மட்டுமே வைத்துள்ள இந்தியப் பயணிகள், இனி அமீரக விமான நிலையங்களில் இறங்கியதும் நேரடியாக விசா ஆன் அரைவலை பெற முடியாது. இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வரும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இது நடைமுறைக்கு வரும்போது பிரிட்டன் வாழ் இந்திய சுற்றுலாப் பயணிகள், அடிக்கடி பிசினஸ் நிமித்தமாகத் துபாய் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் இனி பயணத்திற்கு முன்பே வழக்கமான அமீரக விசாவுக்கு விண்ணப்பித்துப் பெற வேண்டும்.

யாருக்கெல்லாம் 'விசா ஆன் அரைவல்' சலுகை தொடரும்?

பிரிட்டன் விசாவுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும், பின்வரும் ஆவணங்களை வைத்துள்ள இந்தியப் பயணிகளுக்கு அமீரக அரசு 'விசா ஆன் அரைவல்' சலுகையைத் தொடர்ந்து வழங்குகிறது.

  • அமெரிக்கச் சுற்றுலா விசா (US Tourist Visa)
  • அமெரிக்க கிரீன் கார்டு (US Green Card)
  • ஐரோப்பிய ஒன்றிய சுற்றுலா விசா (EU Tourist Visa)
  • ஐரோப்பிய ஒன்றிய குடியிருப்பு விசா (EU Residence Visa)

இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள் வழக்கம் போல அமீரகத்தில் 14 நாட்கள் தங்குவதற்கான விசா ஆன் அரைவலை பெறலாம். தேவைப்பட்டால் கூடுதலாக ஒரு 14 நாட்களுக்கு இதனை நீட்டித்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

பிரிட்டன் விசாவுக்கு செக் வைத்தாலும், இந்தியர்களுக்குப் புதிதாக 60 நாட்கள் வரை செல்லுபடியாகும் 'விசா ஆன் அரைவல்’ வசதியை வழங்குவது குறித்தும் அமீரக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.  ஆனால், இது அனைத்து இந்தியர்களுக்கும் கிடைக்காது. தற்போதுள்ள 14 நாள் விசா ஆன் அரைவல் பெற தகுதியுடைய (அமெரிக்க/ஐரோப்பிய விசா வைத்துள்ள) நபர்களுக்கு மட்டுமே இந்த 60 நாள் சலுகையும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்போது அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

வல்லுநர்கள் தரும் முக்கிய அட்வைஸ்

பிரிட்டன் விசா மட்டுமே வைத்துள்ள இந்தியப் பயணிகள், இனி அமீரகத்திற்குப் டிக்கெட் புக் செய்வதற்கு முன்பே தங்களது விசா தகுதியைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில், நீங்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே உங்களிடம் முறையான அமீரக விசா இருக்கிறதா என்பதை விமான நிறுவனங்கள் கட்டாயமாகச் சரிபார்க்கும். எனவே, கடைசி நேரத் தவிப்புகளைத் தவிர்க்க முன்கூட்டியே விசாவுக்கு விண்ணப்பித்துவிடுங்கள்.

source https://tamil.indianexpress.com/international/shocking-news-uae-visa-on-arrival-rules-updated-read-full-story-12127600