புதன், 11 நவம்பர், 2026

சுயசரிதையில் மனம் திறந்த பதிவு

 source https://tamil.indianexpress.com/india/sonia-gandhi-reveals-2010-breast-cancer-diagnosis-in-memoir-says-cancer-was-later-detected-in-pancreas-12800128


Screenshot 2026-11-11 101526

எழுதியவர்:ரிது சரின்

சோனியா காந்தி எழுதியுள்ள ‘பிலாங்கிங்: அ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற சுயசரிதை நூலில், தனக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகள் குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார். 2010-ல் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், பின்னர் கணையத்திலும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக இத்தாலியின் மிலன் மற்றும் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரங்களில் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

2010-ல் முதன்முதலில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டபோது, டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனை மருத்துவர்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருந்ததாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தியாவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டால் ஊடகங்களில் ஏற்படும் பரபரப்பைத் தவிர்க்கவே வெளிநாட்டுக்குச் செல்ல முடிவெடுத்ததாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ளதாவது:

“இந்தச் செய்தி என்னை நிலைகுலையச் செய்ததுடன் கவலையிலும் ஆழ்த்தியது. நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று எனக்கும் எனது குழந்தைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. என் மனதில் பல அச்சமூட்டும் எண்ணங்கள் ஓடத் தொடங்கின. டெல்லியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டால் தவிர்க்க முடியாமல் ஏற்படும் ஊடகப் பரபரப்பின் மையத்தில் இருக்க நான் விரும்பவில்லை. உண்மைதான், நான் ஒரு பொது நபராக மாறியிருந்தேன். அதற்காக எனக்குக் குறைந்தபட்சத் தனியுரிமைகூட இருக்கக் கூடாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


முதல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் வெரோனேசி, சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், உடலில் புற்றுநோய் பாதிப்பின் எச்சங்கள் எதுவும் இல்லை என்றும் உடனடியாகத் தெரிவித்ததாக சோனியா நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், “அவர் இரண்டு கட்டிகளை அகற்றினார். சந்தேகத்துக்குரியதாக இல்லாத மற்றொரு கட்டியையும் முன்னெச்சரிக்கையாக அகற்றினார். அத்துடன், ஐந்து வாரங்கள் கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தைத் தவிர்க்கும் வகையில், அறுவை சிகிச்சையின்போதே கதிர்வீச்சு சிகிச்சையும் அளித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 2011-ல் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டபோது கணையத்தில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்ததாகவும், முந்தைய நோய்ப் பாதிப்பு மீண்டும் ஏற்பட்டிருக்கலாம் என்று தானும் தனது குழந்தைகளும் உடனடியாக அஞ்சியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது நூலில், “இது எனக்கும் குழந்தைகளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. முந்தைய நோய்ப் பாதிப்பு மீண்டும் ஏற்பட்டிருக்கலாம் என்றுதான் உடனடியாக நினைத்தோம். பல மருத்துவ ஆலோசனைகளுக்குப் பிறகு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கருதினர். அனைவரும் நம்பிக்கை அளித்தபோதிலும், அறுவை சிகிச்சை குறித்த பதற்றமும் கவலையும் எனக்கு இருந்தன. ஏனெனில், நோயின் உண்மையான பாதிப்பை அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான் கண்டறிய முடியும். மிக மோசமான நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இது ஏற்கெனவே இருந்த புற்றுநோய் பரவியதால் ஏற்பட்ட கட்டியாக இருந்தால் என்ன செய்வது? இந்த அறுவை சிகிச்சையிலிருந்து நான் மீண்டு வருவேனா?” என்று தனது அச்சத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து, நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் இரண்டாவது அறுவை சிகிச்சை நடைபெற்றது. மருத்துவர் காஸ்பர் வான் எய்க் (Dr Casper van Eijck) இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கட்டி ஆரம்பநிலையிலேயே கண்டறியப்பட்டதால் தான் அதிர்ஷ்டவசமாகத் தப்பியதாக மருத்துவர் தெரிவித்ததாக சோனியா குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அவர் நான்கு வாரங்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தார். அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும் மகள் பிரியங்கா அவருடன் இருந்துள்ளார்.

டெல்லிக்குத் திரும்பிய பிறகு, நீண்ட நேரம் நடைபெற்ற இரண்டாவது அறுவை சிகிச்சையால் உடல் மிகவும் பலவீனமடைந்திருந்ததாகவும் சோனியா நினைவுகூர்ந்துள்ளார். அதேநேரத்தில், இரண்டு அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாமல் தப்பியதை அதிர்ஷ்டமாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.