ரஷ்யா - உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை அபுதாபியில் தொடக்கம்: 11 11 2026
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அபுதாபியில் நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அமெரிக்கத் தூதர் ஜாரெட் குஷ்னர் (நடுவில் இடதுபுறம்) பேசுகிறார். (படம்: ஏ.பி.)
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை அபுதாபியில் தொடங்கியது.
இந்தச் சூழலில், பிராந்தியத்தில் அமைதியை மீட்க "இரு தரப்புடனும் மற்றும் தொடர்புடைய பிற நாடுகளுடனும்" இந்தியா தொடர்பில் இருப்பதாகவும், அமைதி முயற்சிக்குத் தொடர்ந்து பங்களித்து வருவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் தொடங்கியுள்ள இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, உக்ரைனின் உணவு தானியப் பெருவழிப் பாதைகளை (Food Corridors) அமைப்பதில் மத்தியஸ்தம் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக மோடி கூறியதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
போரை நிறுத்த இந்தியாவின் 3 முக்கிய முன்மொழிவுகள்:
*ஜூலை மாதம் முதல் கருங்கடல் (Black Sea) பகுதியில் தீவிரமடைந்துள்ள சண்டையைக் குறைத்து, உக்ரைனின் விவசாயப் பொருட்கள் உலக நாடுகளைச் சென்றடையப் பாதுகாப்பான வழியை ஏற்படுத்துவது.
*உக்ரைனின் மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதைத் தடுப்பது.
*எல்லைக் கோட்டுப் பகுதிகளில் உள்ள ரஷ்ய நிலைகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவதைத் தவிர்ப்பது.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
"உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளே தீர்வைத் தரும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. 'முடிவில்லா போர் முடிவுக்கு வர வேண்டும்' என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, கருங்கடலில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு, தானியங்கள் மற்றும் ஆற்றல் ஏற்றுமதி குறித்த கவலைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து இரு தரப்புடனும் இந்தியா விரிவாகப் பேசியுள்ளது.
பிரதமர் மோடி அதிபர் ஜெலென்ஸ்கியிடம் இந்தியாவின் உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் பேசினார்" என்றார்.
கடந்த மாதம் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா பேசுகையில், போரை முடிக்க இந்தியா ஒரு "விரிவான மற்றும் பரந்த" திட்டத்தை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், "மோடி போரை முடிவுக்குக் கொண்டுவரத் தொடர்ந்து வலியுறுத்துகிறார்; அவரிடம் சிறந்த யோசனைகள் உள்ளன" என்று பாராட்டியிருந்தார்.
அமைச்சர் ஜெய்சங்கரும், இந்தியா வெறும் ஆதரவு தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், கருங்கடல் கப்பல் போக்குவரத்து, தானிய-ஆற்றல் ஏற்றுமதி மற்றும் தாக்குதல்களைக் குறைப்பது குறித்து இரு நாடுகளுடனும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
உலகளவில் 40 கோடி பேருக்கு உணவுப் பற்றாக்குறை அபாயம்
தானிய ஏற்றுமதியில் உலக அளவில் முக்கியப் பங்கு வகிக்கும் கருங்கடல் பகுதியில் போர் தீவிரமடைந்தால், ஆப்பிரிக்கா, மேற்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆசியப் பிராந்தியங்களைச் சேர்ந்த 40 கோடிக்கும் அதிகமான மக்கள் தீவிர உணவுப் பற்றாக்குறை மற்றும் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
உக்ரைனின் 90% விவசாய ஏற்றுமதிகள் கருங்கடலில் அமைந்துள்ள ஒடேசா, சோர்னோமோர்ஸ்க் மற்றும் பிவ்டென்யி ஆகிய 3 முக்கிய துறைமுகங்கள் வழியாகவே நடைபெறுகின்றன.
ரஷ்யாவும் தனது மொத்த தானிய ஏற்றுமதியில் 77% முதல் 81% வரை (சுமார் 4.2 - 4.4 கோடி டன்) அசோவ்-கருங்கடல் பகுதி வழியாகவே ஏற்றுமதி செய்கிறது.
இதன் காரணமாகவே, அபுதாபியில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையைச் சர்வதேச சமூகம் உற்றுநோக்கி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்கின்றனர். கூட்டத்தில் பேசிய குஷ்னர், "இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் குறைந்துள்ளன. போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது" என்றார்.
உக்ரைன் முதன்மைப் பிரதிநிதி ரஸ்டெம் உமேரோவ் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலையான அமைதியை வலியுறுத்தினார். ரஷ்யப் பிரதிநிதி விளாடிமிர் மெடின்ஸ்கி, இரு நாட்டு மக்களின் நலன் கருதி அமைதி பிறக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
உக்ரைன் போர் மட்டுமின்றி, மேற்கு ஆசியாவிலும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
பாரசீக வளைகுடா பகுதியில் அமைந்துள்ள முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகப் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. வணிகக் கப்பல்கள் மற்றும் இந்திய மாலுமிகள் மீது தாக்குதல் நடப்பதைத் தவிர்க்கப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுடனும் இந்தியா பேசி வருவதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.