நாகை, திருவாரூர் மாவட்டங்கள் ஓ.என்.ஜி.சி, கெயில் நிறுவனங்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. புதிய எரிவாயுக் குழாய்களைப் பதிப்பதும், எரிவாயுவைக் கடத்துவதற்குக் கிடைமட்டக் குழாய்கள் அமைப்பதும் தொடர்கின்றன. இவை காவிரிப்படுகையின் உழவுச் சூழலையே இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகளில் கெடுத்து, வயல்வெளிகள் பொட்டல் வெளிகளாகும் அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
விவசாயிகளுக்கு அதிகப் பணம் தருவதாக ஓ.என்.ஜி.சி.யும், கெயில் நிறுவனமும் ஆசை காட்டி விவசாயிகளை ஏமாற்றிக் குழாய் பதிக்கின்றன. விவசாயிகளில் பலர் தங்களுக்குப் பலன் இருந்தால் சரி, எது எக்கதியானால் என்ன என்று கருதுகிறார்கள். நெருங்கி வரும் அபாயம் குறித்தப் புரிதலோ, கவலையோ, அக்கறையோ பெரும்பாலும் இல்லை. பொதுமக்கள் இன்றுவரைப் பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள். பலர் ஓ.என்.ஜி.சி.யுடன் ஒத்துழைப்பதில் பணப்பலன் அடைகிறார்கள். இதையும் மீறி சில பகுதிகளில் மக்கள் எதிர்த்தால், எண்ணெய் நிறுவனங்கள் வேறு இடங்களில் வேலையைத் தொடங்குகிறார்கள். எதிர்ப்பு இருக்கும் பகுதிகளில், கெயில், ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் இரவு நேரங்களில் ஊரடங்கியதும் குழாய்களை வெல்டிங் செய்கின்றன. மக்களின் கண்களில் படாமல் காரியங்கள் நடக்கின்றன.
நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியில் அஞ்சார்வார்த்தலையில் உள்ள ஓ.என்.ஜி.சி. எரிவாயுக் குழாய் வளாகத்தருகில், ஓ.என்.ஜி.சி. கிடைமட்டக் குழாய்களை அமைத்து வருகிறது. குத்தாலம் ஓ.என்.ஜி.சி. எரிவாயு வளாகம் 1, 2 மற்றும் சில எரிவாயுக் குழாய் வளாகங்களிலிருந்து, எரிவாயு கொண்டு வர 7 புதிய குழாய்களை ஓ.என்.ஜி.சி. அமைக்கத் தொடங்கியிருக்கிறது. இதில் இலாபம் காண பலர் துடியாய்த் துடிக்கிறார்கள்.
ஓ.என்.ஜி.சி-யின் வேலைகள் குறித்த செய்தி அறிந்து, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு இன்று 22.07.2016 அன்று முற்பகல் கள ஆய்வு மேற்கொண்டது. தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் திரு. மாரி.பன்னீர் செல்வம், திரு.ந.விஜயராகவன், திரு.கோவி.அசோகன் மற்றும் தோழர் வீரபாண்டியன், திரு.ஜீவானந்தம் மற்றும் உள்ளுர் உணர்வாளர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர். குழாய்ப் பதிப்பைத் தடுத்து நிறுத்த அணி திரள வேண்டிய நேரம் இது. அக்கறையுள்ளவர்கள் பின் வரும் எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.
9842007371, 9443573488, 9443066736, 9443395550
9842007371, 9443573488, 9443066736, 9443395550