/indian-express-tamil/media/media_files/2026/02/04/russia-on-trump-2026-02-04-22-05-54.jpg)
'எந்த நாட்டிலிருந்தும் இந்தியா எண்ணெய் வாங்கலாம்'... டிரம்பின் கருத்துக்கு ரஷ்யா பதிலடி
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறியிருந்த நிலையில், அதற்கு ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்குவதற்கு சுதந்திரம் உள்ளது. தனது கச்சா எண்ணெய் விநியோகஸ்தர்களை இந்தியா பன்முகப்படுத்துவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இந்தியாவுக்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை வழங்கும் ஒரே நாடு ரஷ்யா அல்ல என்பது எங்களுக்கும், சர்வதேச எரிசக்தி நிபுணர்களுக்கும் நன்றாகத் தெரியும். இந்தியா எப்போதும் மற்ற நாடுகளிடமிருந்தும் இந்தத் தயாரிப்புகளை வாங்கி வருகிறது. எனவே, இதில் புதிதாக எதுவும் இல்லை.
முன்னதாக, ரஷ்யாவிற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வாங்க மோடி சம்மதித்ததாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், இது தொடர்பாக இந்தியாவிடமிருந்து தங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என பெஸ்கோவ் தெளிவுபடுத்தியுள்ளார். தேசிய எரிசக்தி பாதுகாப்பு நிதியத்தின் நிபுணர் இகோர் யுஷ்கோவ் இது குறித்துக் கூறுகையில், இந்திய சுத்திகரிப்பு நிலையங்களால் ரஷ்ய கச்சா எண்ணெயை முழுமையாகக் கைவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் 'ஷேல் ஆயில்' லேசானது ஆனால் ரஷ்யாவின் 'யூரல்ஸ்' கச்சா எண்ணெய் மாறுபட்ட கலவை கொண்டது. அமெரிக்க எண்ணெய் பயன்படுத்தினால் மற்றதரங்களுடன் கலக்க வேண்டியிருக்கும், இது செலவை அதிகரிக்கும்.ரஷ்யா தினமும் 15 முதல் 20 லட்சம் பேரல்கள் வரை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த அளவை அமெரிக்காவால் ஈடுகட்ட முடியாது. 2022-ல் ரஷ்யா தனது உற்பத்தியைக் குறைத்தபோது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 120 டாலராக உயர்ந்தது. இது அமெரிக்காவிலேயே எரிபொருள் விலை உச்சத்தைத் தொடக் காரணமானது.
கடந்த ஆண்டு, ரஷ்யாவிடம் எரிசக்தி வாங்குவதைக் காரணம் காட்டி, இந்தியா மீது டிரம்ப் 50 சதவீத வரி விதித்திருந்தார். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88% இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. 2021 வரை ரஷ்ய எண்ணெயின் பங்கு 0.2 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால், உக்ரைன் போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவைப் புறக்கணித்த நிலையில், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக உருவெடுத்தது. இருப்பினும், சமீபத்திய தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி நாள் ஒன்றுக்கு 11 லட்சம் பேரல்களாகக் குறைந்துள்ளது. இது 2025-ன் நடுப்பகுதியில் 20 லட்சம் பேரல்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/india/india-free-to-buy-oil-from-any-country-russia-on-trumps-claim-after-call-with-pm-modi-11076957





