பல அதிரடி சலுகையினால் தொலைதொடர்பு துறையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம் தனது அடுத்த அதிரடி அறிவிப்பிற்கு தயாராகியுள்ளது. மற்ற ஸ்மார்டபோன் நிறுவனத்திற்கு சவால் விடும் நிலையில் 1000 மற்றும் 1,500 ரூபாய் விலைகளில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த போவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களாக கட்டணமின்றி அன்லிமிடட் இன்டர்நெட், வாய்ஸ் கால் வசதிகளை வழங்கி மிக குறுகிய காலத்தில் சுமார் 25 மில்லியன் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. தற்போது அடுத்த நடவடிக்கையாக, மிகக்குறைந்த விலையில் புதிய 4G ஸ்மார்டபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்றால், வாய்ஸ் ஓவர் எல்.டி.ஈ. (VoLTE) எனப்படும் அதிநவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த ஸ்மார்ட் போன்கள் மூலம் அளவில்லா 4G இன்டர்நெட், வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் சேவைகளை இலவசமாக பெற முடியும் என்றும் ரிலையன்ஸ் தெரிவித்திருக்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ஸ்மார்ட் போன்கள் ரூ.1000 மற்றும் ரூ.1,500 விலைகளில் அடுத்த ஜனவரி மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 25 மில்லியன் வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்த்த ஜியோ இந்த அதிரடி ஆஃபரினால் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.