மாத ஊதியத்தினை வங்கிக் கணக்கில் பெற்றவர்கள் ஏடிஎம் மையங்களுக்கு மாற்றாக எங்கெல்லாம் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்பதைக் காணலாம்.
ரூபாய் மதிப்பிழப்பு விவகாரத்தால் பணப்புழக்கம் குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மாத ஊதியம் பெறுபவர்கள் ஏடிஎம் மையங்களை நோக்கி இன்றே படையெடுக்கத் தொடங்கி விட்டனர். இதனால் ஏடிஎம் மையங்கள் வாசலில் வரிசை மேலும் நீண்டுள்ளதை பல இடங்களில் காணமுடிகிறது.
ஏடிஎம் மையங்கள் தவிர வங்கிக் கிளைகளுக்கு நேரடியாக சென்றும் பணம் எடுத்துக் கொள்ளலாம். அதுதவிர சில மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள.பிக்பஜார் வணிக வளாகங்கள் மற்றும் ஐனாக்ஸ் மால்களில் டெபிட் கார்டுகள் மூலம் ரூ.2,000 வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகள் மூலம் மக்கள், தங்கள் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.
அதேபோல, மும்பையை சேர்ந்த மெட்ரோ, மோசி, கேட்வால்க், ஆசியாடிக், ரூபம், பென்சர், ரூப்மிலன், அமர்சான்ஸ், ரூப் சங்கம் போன்ற நிறுவனங்களும் இந்த சேவையை அளிக்க முன்வந்துள்ளன. இந்த சேவைக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் மாறாக வங்கிகள் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 செலுத்த இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தினசரி வர்த்தகம் ரூ.2 லட்சத்தைத் தாண்டும் அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது பிஓஎஸ் இயந்திரம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த வசதியை மேலும் பல நிறுவனங்கள் வழங்க முன்வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.