வியாழன், 1 அக்டோபர், 2015

புதுகையில் திடீர் மழை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி


புதுகையில் நேற்று திடீரென பெய்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். புதுகையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் வெப்பத் தாக்கத்தினால் பரிதவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென வானம் மேக மூட்டத்துடன் மழை வருவதற்கான அறிகுறியை காட்டியது. இதையடுத்து மதியம் 2.15 மணி முதல் சிறு, சிறு தூறாக மழை பெய்ய துவங்கியது. பின்னர் 2.30 மணிக்கு பலத்த மழையாக மாறி கொட்டித்தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையினால் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கீழராஜவீதி உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் நின்றது. நேற்று பெய்த இந்த திடீர் மழையினால் புதுகை நகரில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷண நிலை ஏற்பட்டது. இதனால் நகர பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் புதுகை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
மழையளவு 19.89% பதிவு
புதுகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று (29ம் தேதி) காலை 8.30 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: அறந்தாங்கி 5.20, ஆயிங்குடி 7, மீமிசல் 27.20, கட்டுமாவடி 14, மணமேல்குடி 95, அன்னவாசல் 75, இலுப்பூர் 14, குடுமியான்மலை 70, பொன்னமராவதி 31.20, மழையூர் 3, புதுக்கோட்டை 10, பெருங்களுர் 11, ஆதனக்கோட்டை 19, கீரனூர் 59, உடையாளிப்பட்டி 11, திருமயம் 3.80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. புதுகை மாவட்டத்தில் மொத்தம் 497.20 மில்லி மீட்டர் மழை பெய்தது. இது சராசரியாக 19.89 சதவீதம் ஆகும்.