புதன், 30 நவம்பர், 2016

பெற்றோர் சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டில் மகன் உரிமை கோர முடியாது....டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

பெற்றோர் தன் சுய சம்பாதியத்தில் வாங்கிய வீட்டில், அவர்கள் விரும்பாவிட்டால் மகன் சட்டரீதியாக உரிமை கொண்டாட முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் தனது வீட்டில் இருந்து மகன் மற்றும் மருமகள் காலி செய்ய மறுப்பதை எதிர்த்து பெற்றோர் சார்பில் கீழ்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் பெற்றோருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. அதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மகன் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
தங்கள் வீட்டில் வசிக்கும் மகன் மற்றும் மருமகள், மூத்த குடிமக்களான தங்களது வாழ்க்கையை நரகமாக்கி விட்டதாகவும், எனவே, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் பெற்றோர் தரப்பில் வாதிடப்பட்டது. பெற்றோரின் வீட்டில் வசிக்க மகனுக்கு உரிமை இருப்பதாக மகன் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சுய ச‌ம்பாதியத்தில் பெற்றோர் வாங்கிய வீட்டில், அவர்கள் விரும்பும் வரை மட்டுமே மகன் வசிக்க முடியும் என்றும் பெற்றோர் விரும்பாத நிலையில், சட்டரீதியாக வீட்டில் வசிக்க மகனுக்கு உரிமையில்லை என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.