கறுப்பு பண ஒழிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் அடுத்த கட்ட நகர்வாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் கறுப்பு பணத்திற்கு வரி விதிப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய வருமான வரிச் சட்ட திருத்த மசோதாவை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.
கறுப்புப் பணத்துக்கு கடிவாளம் போடக்கூடிய இம்மசோதாவின் முக்கிய அம்சங்கள்:.
இம்மசோதாவின்படி வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் கணக்கில் காட்டப்படாத பணத்திற்கு 30 சதவிகித வரியும் 10 சதவீத அபராதமும் விதிக்கப்படும். மேலும் வரியில் மூன்றில் ஒரு பகுதி அதாவது 10 சதவீதத்தை அரசிற்கு கூடுதல் வரியாக செலுத்த வேண்டும். இதன் மூலம் கணக்கில் வராத தொகையை டெபாசிட் செய்பவர்கள் அதன் மதிப்பில் 50 சதவீதத்தை அரசுக்கு பல்வேறு பெயர்களில் தர வேண்டியிருக்கும். கூடுதல் வரியாக வசூலிக்கப்படும் 10 சதவிகித தொகை நீர்ப்பாசனம், சாலைகள், கட்டுமானத் திட்டங்கள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணத்தை 4 ஆண்டுகளுக்கு வெளியில் எடுக்க முடியாது என்றும் இம்மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கறுப்புப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யாமல் ஏமாற்றியது அரசிற்கு தெரியவந்தால், அத்தொகைக்கு 75 சதவிகித வரி மற்றும் 10 சதவிகித அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டை வங்கிகளில் டெபாசிட் செய்ய பொதுமக்களுக்கு வரும் டிசம்பர் 30ம் தேதி வரை அரசு காலஅவகாசம் வழங்கியுள்ளது. இதில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு உரிய கணக்கு காட்டப்படாவிட்டால் அது கறுப்பு பணமாக கருதப்பட்டு வரி விதிக்கப்படும் என இம்மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள் : November 28, 2016 - 07:52 PM