புதிய 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் தமிழகம் வந்து சேரவில்லை என்றும் பாதுகாப்பு காரணமாக வெளிப்படையாக தெரிவிக்கமுடியாது என்று ரிசர்வ் வங்கி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கணக்கு வைத்திருக்கும் ராமமூர்த்தி பணம் பெறுவதற்கு சிரமமாக இருப்பதாக தொடர்ந்த வழக்கில், புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வராததால் கடந்த ஒருவாரமாக பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன், இதுவரை தமிழகத்திற்கு 500 ரூபாய் நோட்டுகள் வந்து சேரவில்லை என்று தெரிவித்தார். அதேநேரத்தில் எப்போது வந்து சேரும் என்பதை பாதுகாப்பு காரணம் கருதி வெளிப்படையாக கூற இயலாது என்றும் கூறினார்.
அடுத்ததாக, மத்திய அரசின் சார்பில் ஆஜரான உதவி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சீனிவாசன், பழைய நோட்டுகளை திரும்ப பெறுவது குறித்து தொடரப்பட்ட வழக்குகளுக்கு தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு, மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும் பொதுமக்களின் பிரச்னைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று ஆராய்வதாகவும் கூறினார். கூட்டுறவு வங்கிகளில் பழைய பணத்தை மாற்ற முடியாமல் விவசாயிகள் சிரமப்படுவதாகவும், ரிசர்வ் வங்கியின் தடை உத்தரவை நீக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது நாடு தழுவிய பிரச்னை என்தால், ரிசர்வ் வங்கியும் உச்சநீதிமன்றமும் எடுக்கும் முடிவுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்து வழக்கை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
பதிவு செய்த நாள் : November 18, 2016 - 12:01 PM