ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, மின்னணு பணப் பரிமாற்றத்தை நோக்கிய முக்கிய மைல்கல் இது என்று வர்ணித்தது. உலகம் முழுவதுமே மின்னணு பணப் பரிமாற்றம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றிய விவரங்களை அறிவோம்.
மனிதவள குறியீடுகளில் முன்னிலை வகிக்கும் ஸ்வீடன் மின்னணு பணப்பரிமாற்றத்திலும் முதன்மையான இடத்தை வகிக்கிறது. இங்கு 97 சதவிகித பணப்பரிமாற்றங்கள் மின்னணு பணப் பரிமாற்றம் மூலமாகவே நடக்கின்றன. பேருந்து பயணத்திலிருந்து சர்ச் உண்டியலில் பணம் போடுவது வரை ஸ்வீடனில் எல்லாமே மின்னணு பணப் பரிமாற்றம்தான்.
மின்னணு பணப்பரிமாற்றம் அதிகரித்த பிறகு ஸ்வீடனில் வங்கிக் கொள்ளைகள் வெகுவாக குறைந்து விட்டன. மற்றொரு ஸ்காண்டிநேவியன் நாடான நார்வேயும் மின்னணு பணப்பரிமாற்றத்தில் முன்னணியில் உள்ளது. இங்கு பல இடங்களில் ரொக்கப் பணப்பரிமாற்றத்துக்கு தடை அமலில் இருக்கிறது. இவ்விரு நாடுகளுக்கும் அருகேயுள்ள டென்மார்க், 2030- க்குள் முழுமையான மின்னணு பணப்பரிமாற்றம் என்ற நிலையை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் 93 சதவிகிதம் பேர் மின்னணு பணப்பரிமாற்றம் செய்கின்றனர். இங்கு 3 ஆயிரம் யூரோவுக்கு மேல் ரொக்கப் பணப்பரிமாற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை தவிர பிரான்ஸ், பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளும் பட்டியலில் முன்னணியில் இருக்கின்றன.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சோமாலியா, கென்யா ஆகிய ஆப்ரிக்க நாடுகளும் கூட அதிக அளவில் மின்னணு பணப்பரிமாற்றங்களை மேற்கொள்கின்றன. ஆசிய நாடான தென்கொரியாவிலும் மின்னணு பணப்பரிமாற்றம் கணிசமான அளவில் இருக்கிறது. பட்டியலில் முன்னிலை பெறும் நோக்கில் இந்தியாவும் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
பதிவு செய்த நாள் : November 20, 2016 - 01:09 PM