வெள்ளி, 18 நவம்பர், 2016

வங்கிகளில் பணம் எடுக்க விவசாயிகள், வர்த்தகர்கள், திருமண வீட்டாருக்கு புது சலுகை..

வங்கிகளில் பணம் எடுக்க விவசாயிகள், வர்த்தர்கள், மற்றும் திருமண வீட்டாருக்கு புது சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8- ஆம் தேதி அறிவிப்பு விடுத்தார். இதை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி மற்றும் அஞ்சலகங்கள் முன் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்....
* வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் பதிவு செய்து, விளைபொருளை விற்கும் விவசாயிகள் வாரத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை காசோலையாகவோ, வங்கிக் கணக்கி‌ல் இணைய தள பரிமாற்றம் மூலமாகவோ பெற அனுமதிக்கப்படும். காசோலையை வங்கியில் செலுத்தி, அவர்கள் 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
* வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் பதிவு பெற்ற விளைபொருளைக் கொள்முதல் செய்யும் வணிகர்கள் வாரத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
* விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுக்கான பீரிமியத்தைச் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
* பயிர்க் கடனுக்கான அனுமதியைப் பெற்ற விவசாயிகள், தங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் கடன் தொகையில் வாரத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
* பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள, அதிகம் பேர் வங்கிக் கவுன்ட்டரை அடையும் வகையில், ஒருவருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த உச்ச வரம்பு, நாளை முதல் 2 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது. கைவிரலில் மை வைப்பதன் மூலம் ஒருவர் ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பை பெற முடியும். அதற்கு மேற்பட்ட தொகைக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால், வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து பிறகு எடுத்துக் கொள்ளலாம்.
* திருமணத்துக்காக பணம் தேவைப்படுவோர் ஒருவரது வங்கிக் கணக்கில் இருந்து அதி‌கபட்சமாக இரண்டரை லட்ச ரூபாயை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். திருமணம் தொடர்பான ஆவணங்களை இதற்கு சான்றளிக்க வேண்டும்.
* மத்திய அரசு ஊழியர்களில் சி பிரிவு வரை உள்ளவர்கள், அலுவலகம் வாயிலாக முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம். இந்த முன்பணம், அடுத்த மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.

Related Posts: