நான்கு தொகுதிகள் இடைத்தேர்தலில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜகவுக்கு மக்கள் மரண அடியினைக் கொடுத்துள்ளார்கள். எவன் வெற்றிப்பெற்றாலும் இப்போதைய அகல நிலை தமிழகத்துக்கு மாறப்போவதில்லை. ஆனாலும் கறுப்புப் பண ஒழிப்பு மகா வீரர் மோடியின் சமீபத்திய மெகா திட்டத்தால் அவமதிக்கப்பட்ட, தினசரி வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்ட, வங்கி வாசலில் சொந்தக் காசை எடுக்கப் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்ட கொடுமை சாதாரண மக்களின் மனதில் எந்த அளவு இறங்கியுள்ளது என்பது தெரிந்துகொள்ளும் அவசரமாக இருப்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஆளும் அதிமுக முன்னிலை வகிக்கிறது. எதிர்பார்த்ததுதான். ஆனால், 5 ஆம் சுற்று முடிவடைந்த நிலையில் தஞ்சை தொகுதியில் பாஜக பெற்றுள்ளது வெறும் 309 ஓட்டுகள். அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இரு சுற்றுகள் முடிவில் ஒரு ஓட்டுகூட பெறவில்லை.
அதே சமயம், புதுவை நெல்லிதோப்பு தொகுதியில் காங்கிரஸ்+திமுக வேட்பாளர் நாராயணசாமி வெற்றிபெற்றுள்ளார். இவர் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளரைவிட சுமார் 11 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளார். அதிமுகவுக்கு வெறும் 7500 சொச்சம் ஓட்டுகளே. இங்கு அதிமுக, பாஜகவுடன் கூட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து விளங்குவது என்ன?
மோடியின் 500, 1000 ரூபாய் செல்லாது அறிவிப்பை 85 சதவீத மக்கள் வரவேற்றுள்ளதாக கூவிய வெட்கம் கெட்ட ஊடகங்களே, இப்போது நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்!
இனியாவது, ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற மரியாதைக் காப்பாற்றும் வகையில் கொஞ்சமாவது மக்களுக்காக நீதி, நியாயத்துடன் ஊடகம் நடத்துங்கள். இல்லையேல் உங்களுக்கு எதிராகவும் மக்கள் திரும்பும் காலம் வரும்!