சென்னை, சேப்பாக்கத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின்போது, 'ஈஷா யோகா மையம் நடத்தும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்கக் கூடாது' என்று தெரிவித்தனர்.
வரும் 24-ம் தேதி சிவராத்திரி அன்று, ஈஷா யோகா மையம் சார்பில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். ஈஷா யோகா மையம் விதிமுறைகளை மீறியுள்ளதால், இந்நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று மூவரும் கூறினர்.
அப்போது பேசிய முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன், 'விதிகளை மீறி 13 லட்சம் சதுர அடியை ஆக்கிரமித்துதான் ஈஷா யோகா மையம் கட்டடங்களை நிறுவியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, தொடர்ந்து கட்டடங்களைக் கட்டிவருகிறது ஈஷா. எனவே, வரும் 24-ம் தேதி நடக்கவுள்ள நிகழ்ச்சியில், பிரதமர் பங்கேற்கக் கூடாது' என்று கேட்டுக்கொண்டார்.
நல்லகண்ணு கூறுகையில், 'தொடர்ந்து பல ஆண்டுகளாக விதிமுறைகளை மீறி ஈஷா யோகா மையம் கட்டடங்களை எழுப்பியுள்ளது. அதனால்தான், ஈஷா யோக மையம் நடத்தவுள்ள நிகழ்வை எதிர்க்கிறோம். பிரதமர் வருவதால் எதிர்க்கவில்லை. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் மட்டுமே இந்த நிகழ்ச்சியை எதிர்க்கிறோம்' என்று தெரிவித்தார்.
http://www.vikatan.com/news/tamilnadu/81654-isha-yoga-centre-has-breached-regulations-accuses-justice-hariparanthaman.html