வெள்ளி, 10 மார்ச், 2023

மீண்டும் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் நிறைவேற்ற முடிவு

 9 3 23

ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்; மீண்டும் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் நிறைவேற்ற முடிவு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை சட்டப்பேரையில் நிறைவேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபட்டு பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்ததால், பல்வேறு தரப்பில் இருந்தும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து செப்டம்பர் 26, 2022-ல் அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டத்துக்கு அட்கோபர் 1-ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அக்டோபர் 3, 2022-ல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, அக்டோபர் 19-ம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டத்தை நிரந்தரமாக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த சட்ட மசோதா அக்டோபர் 28-ம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கோரி தமிழக அரசு அனுப்பி வைத்திருந்தது. அதற்கு ஆளுநரின் ஒப்புதல் அளிக்காத நிலையில், அது காலாவதியானது. அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்த ஆளுநர், இந்த சட்ட மசோதாவுக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக அரசு தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தது.

அவசர சட்டத்தில் இடம்பெற்றிருந்த அதே அம்சங்கள்தான், சட்ட மசோதாவிலும் இடம்பெற்றிருந்தது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அது தொடர்பாக தமிழக அரசிடம் பல்வேறு விளக்கங்களைக் கேட்டு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியிருந்தார். இதற்கு தமிழக அரசும் 24 மணி நேரத்திற்குள்ளாக விரிவான விளக்கம் அளித்திருந்ததாக தமிழக சட்டத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக ஆளுநரிடம் கடந்த 4 மாதங்களாக பரிசீலனையில் இருந்த நிலையில், மார்ச் 08-ம் தேதி இரண்டாவது முறையாக அந்த சட்ட மசோதாவில் சில விளக்கங்களைக் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 09) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும். இந்த தடை சட்டத்தை இயற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். நாங்கள் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என்று சட்டத்தை இயற்றி மீண்டும் அனுப்ப உள்ளோம்.

4 மாதங்களில் 12 பேர் மரணம் சட்டத்தில் உள்ளதை, திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைதான் ஆளுநர் கேட்டுள்ளார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரத்தை எங்களுக்கு கொடுத்துள்ளது.
அதன்பிறகு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அனைத்து தரப்பினரையும் கேட்டுதான் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஆளுநரிடம் இருந்த காலத்தில் 12 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ஆளுநர் கேட்ட விளக்கங்களை தமிழ்நாடு அரசு கொடுக்கவில்லை என்று அண்ணாமலை விமர்சித்தது பற்றிய கேள்விக்கு, ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்ட விளக்கங்களை நான் கொடுத்துள்ளேன்.

மசோதா குறித்து ஆளுநர் என்னென்ன விளக்கங்கள் கேட்டார் என்று அண்ணாமலைக்கு எப்படி தெரியும்? அரசின் ரகசியங்களை அண்ணாமலையிடம் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தாரா? என்று கேள்வி எழுப்பினார். அதேபோல், இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும். நாங்கள் அதற்கு முன்னோட்டமாக தடை செய்கிறோம் என்று தெரிவித்தார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-cabinet-meeting-decides-again-to-pass-online-rummy-ban-bill-608182/