செவ்வாய், 14 மார்ச், 2023

தமிழக பெண் ஆக்டிவிஸ்ட் மீது இணைய தாக்குதல்

 14 3 2023

tamil nadu, tamil nadu news, chennai, chennai news, ஷாலின் மரியா லாரன்ஸ், இணையத் தாக்குதல், தலித் அரசியல், தலித் பெண் செயற்பாட்டாளர், cyber harassment, cyber crime, shalin maria lawrence, dmk, bjp, facebook, twitter, women in media, Tamil indian express news
தலித் செயற்பாட்டாளர் ஷாலின் மரியா லாரன்ஸ்

சென்னையைச் சேர்ந்த எழுத்தாளரும், தலித் செயல்பாட்டாளருமான ஷாலின் மரியா லாரன்ஸ் சமூக வலைதளங்களில் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதை இந்திய ஊடக வலையமைப்பு (NWMI) வன்மையாகக் கண்டித்துள்ளது.

சமீபத்திய வாரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் தாக்குதல் அதிகரித்து வருவது, குறி வைத்து துன்புறுத்துவதற்கு சமம், சமூக ஊடகங்களில் தி.மு.க மற்றும் பா.ஜ.க இரண்டையும் ஆதரிக்கும் பயனர்களால் குறிவைக்கப்பட்டுள்ளார் என்று இந்திய ஊடக வலையமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முகநூலில் சுமார் ஒரு தசாப்த காலமாக நன்கு அறியப்பட்ட வர் ஷாலின் 2018-க்குப் பிறகு தமிழ்நாட்டில் சாதி வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ட்விட்டரில் பதிவிடத் தொடங்கினார். “இது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க-வுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வலதுசாரி குழுக்களின் கோபத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், சுயபரிசோதனையில் ஈடுபடாமல் அல்லது குறைந்தபட்சம் உண்மைகள், புள்ளிவிவரங்கள் அல்லது யோசனைகள் மூலம் அவரை எதிர்த்துப்பதற்குப் பதிலாக, சமூக ஊடகங்களில் அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டனர். சாதிய அவதூறுகள், அவரை இழிவுபடுத்துதல், அவரது மதத்தின் அடிப்படையில் அவதூறு செய்தல், அவருடைய தன்மை மற்றும் நேர்மைக்கு எதிராக மோசமான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். அதுமட்டுமில்லாமல், அவர்கள் அவருடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்களையும் குறிவைத்து தாக்குகின்றனர்” என்று இந்திய ஊடக வலையமைப்பு அறிக்கை கூறுகிறது.

மேலும், அந்த அறிக்கையில், ஷாலின் அமைதியாக இருக்க மறுப்பது அவரது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “இருப்பினும், சாதி மற்றும் பெண்களைப் பற்றி பேசவும் எழுதுவதில் அவர் விடாப்பிடியாக இருக்கிறார். ஏனெனில், இவை பொது உரையாடலில் இடம் பெற வேண்டிய முக்கியமான பிரச்சினைகள் என்று அவர் நம்புகிறார். இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்காக பேசுகின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் சாதி அடிப்படையிலான வன்முறையை சுருக்கமாக கண்டிக்கிறது. ஆனால், எந்த ஒரு அரசியல் கட்சியும் அதன் ஆதரவாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் பெண்களை, குறிப்பாக விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்களை ஒருங்கிணைத்து, குறி வைத்து துன்புறுத்துவதில் ஈடுபடுவதைத் தடுப்பதாகத் தெரியவிலை” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு முக்கிய தலித் செயல்பாட்டாளராகவும் எழுத்தாளராகவும் இருப்பதால், தமிழ்நாட்டில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின்போது அவரைச் சந்தித்த பல செயல்பாட்டாளர்களில் ஷாலினும் ஒருவர். காங்கிரஸ் கட்சியுடன் அவருக்கு கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவைச் சந்தித்து உரையாடினார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் செவ்வாய்க்கிழமை பேசிய ஷாலின், தனது செயல்பாட்டின் மூலம் தாக்குதல்களை எதிர்கொண்டதாகக் கூறினார். ஆனால், சமீபத்திய தாக்குதல் மிகவும் அமைப்பாக்கப்பட்ட தாக்குதல், இது முன் எப்போதும் இல்லாதது என்று அவர் கூறினார். தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆதரவு ஐடிகளில் இருந்து சில நேரங்களில் தாக்குதல் அலை எப்படி வருகிறது என்பதை அவர் விவரித்தார். “பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் சைபர் குழுக்களைப் போலவே, தி.மு.க-விலும் உள்ள அமைப்பு மற்றும் வாட்ஸ்அப் போர் குழுக்கள் உள்ளன. அவர்கள் தாக்கும் போது, ​​அவர்கள் ஒன்றாக, ஒரே நேரத்தில் தாக்குகிறார்கள், ஒரு நபரை குறிவைக்கும் வகையில் ஒரே மாதிரியான ட்வீட்கள், பதிவுகள் செய்யப்பட்டு பலரிடையே பகிரப்படுகின்றன” என்று அவர் கூறினார்.

“நான் ஒரு காலத்தில் தீவிர தி.மு.க ஆதரவாளராக இருந்தேன், 2018-ல் நான் தலித் இயக்கத்திற்கு மாறியபோது நான் பிரபலமடையவில்லை” என்று அவர் கூறினார். “அரசியல் கட்சியை யார் வேண்டுமானாலும் ஆதரிக்கலாம். ஆனால், ஒரு சிலரால் மட்டுமே செயல்பட முடியும். நான் நிதி வசதி உள்ளதால் அதைச் செய்ய முடிகிறது. கிராமங்களில் புகார்கள் வரும்போது, ​​அதை எடுத்து எழுதுகிறேன். பா.ஜ.க-வையும் அ.தி.மு.க-வையும் விமர்சித்து வந்த நான் இப்போது தி.மு.க ஆளுங்கட்சியாக இருப்பதால் அதை விமர்சிக்கச் செய்கிறேன். நான் ஆன்லைனில் எடுத்துக்கொண்டிருக்கும் பல தலித் பிரச்சனைகள்தான் இப்போது அவர்களைத் தூண்டிவிடுகின்றன” என்று அவர் கூறினார்.

புதுக்கோட்டை வேங்கைவயல் தலித் மக்களுக்கு குடிநீர் வழங்கும் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர்களில் ஷாலினும் ஒருவர். தலித்துகளின் நிலப் பிரச்சனைகள், தமிழ்நாட்டு கிராமங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் பிரதிநிதிகளுக்கு எதிரான பாரபட்சமான சம்பவங்கள் மற்றும் கிராமங்களில் தலித்துகள் நடக்க மறுக்கப்பட்ட சம்பவங்களைப் பற்றி கேள்வி எழுப்புவதில் ஷாலின் முன்னணியில் இருந்தார்.

மதுரையில் இயங்கும் எவிடென்ஸ் தொண்டு நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஷாலின், தனது செயல்பாட்டைத் தொடரப் போவதாகக் கூறினார். “அவர்கள் என்னை நீலா (நீலா – தலித் என்று பொருள்), சங்கி மற்றும் யானை என்று அழைக்கிறார்கள், இவை அனைத்தும் தலித் இயக்கத்தைக் குறிக்கின்றன. அவர்கள் என்னை துஷ்பிரயோகம் செய்யும்போது, ​​அம்பேத்கரையும், புத்தரையும்கூட அவதூறு செய்கிறார்கள். அவர்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள், என் கணவரைக் குறிவைத்து அவரைத் தாக்குகிறார்கள், என்னை இழிவான பெயர்களில் அழைக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

இந்திய ஊடக வலையமைப்பின் அறிக்கையில், “தி.மு.க மற்றும் பா.ஜ.க தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்கள் / தொண்டர்களைக் கண்டிக்க வேண்டும். ஷாலின் மற்றும் பிற பெண்களுக்கு எதிரான இத்தகைய துன்புறுத்தலை நிறுத்தச் சொல்லுங்கள்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், “பெண் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் மீதான துன்புறுத்தலை அனுமதிக்க முடியாது, அதை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை தி.மு.க-வும் பா.ஜ.க-வும் தங்கள் ஆதரவாளர்களுக்கு வலுவான செய்தியை அனுப்ப வேண்டும்” என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

“கருத்துக்களுடனுடன் சிந்தனையுடனும் போராட வேண்டும். ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வாதங்கள் அவசியம். ஆனால், பெயர் சூட்டுதலும், குறிவைக்கப்பட்ட தாக்குதல்களும், தவறான வார்த்தைகளும் அரசியல் உரையாடலை அழித்து ஜனநாயகத்தை சிதைத்துவிடும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/woman-dalit-activist-claims-cyber-harassment-journalists-forum-calls-for-action-611569/