செவ்வாய், 19 மார்ச், 2024

தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்: 36 மணி நேரத்தை கடந்தும் ஏன் என்று தெரியவில்லை என துணைவேந்தர் விளக்கம்!

 

குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு  மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கமளித்துள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான்,  தஜிகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சுமார் 300 மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.  அவர்கள் அனைவரும் அங்குள்ள விடுதியில் தங்கி தான் கல்வி கற்கின்றனர்.

ரமலான் மாதம் என்பதால் முஸ்லிம்கள் இந்த மாதத்தில் பகல் முழுவதும் நோன்பு கடைபிடித்து இரவுகளில் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.  இந்த நிலையில் குஜராத் பல்கலைகழக விடுதியில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு தொழுகையில் ஈடுபட்டனர்.

அப்போது விடுதி வளாகத்திற்குள் நுழைந்த ஒரு குழுவினர் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டதை கண்டு தொழக்கூடாது என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.  இதன் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு அது மோதலில் முடிந்தது.  இந்த சம்பவத்தில் இலங்கை மற்றும் தஜிகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர்.  உடனே அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  மேலும்,  வெளிநாட்டு இஸ்லாமிய மாணவர்கள் தங்கியிருந்த அறைகள் மீதும் அந்த கும்பல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், தங்கும் அறையில் இருந்த கட்டில், மெத்தை மற்றும் மேஜை, நாற்காலி மற்றும் மாணவர்களின் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களும் சேதம் அடைந்தன.

இதுதொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து,  இந்த சம்பவம் குறித்து குஜராத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நீரஜா குப்தா கூறியதாவது:

“வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான வன்முறைக்கு மதவழிபாடு காரணமாக இருக்க முடியாது.  இரு குழுக்களிடையே ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில், இந்த சம்பவம் தற்போது நடந்துள்ளது.  ஏன் நடந்தது என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை.  போலீசாரின் விசாரணைக்கு பிறகே தெரியவரும்.  மேலும், இந்த சம்பவத்திற்கு பின்,  வெளிநாட்டு மாணவர்கள் புதிய விடுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்”

இவ்வாறு குஜராத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நீரஜா குப்தா தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/why-was-the-attack-on-foreign-students-engaged-in-prayer-university-vice-chancellor-explanation.html