செவ்வாய், 19 மார்ச், 2024

கொளுத்தத் தொடங்கியது கோடை வெயில்! பரவும் அம்மை நோய்!

 

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால்,  தோல் நோய்,  தட்டம்மை மற்றும் சின்னம்மை போன்ற நோய்களின் அதிகரித்து வருகிறது. 

இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடைக் காலத்தில் வெயிலினால் ஏற்படும் வியர்வையின் காரணமாகவும்,  வைரஸ் தாக்கத்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தோல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால்,  அம்மை நோய் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், கேரளாவில் கடந்த 75 நாட்களில் 6,744 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு பதிவாகி உள்ளதாகவும்,  குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகி உள்ளதாகவும் அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் மாநிலத்தில் 26,363 பேருக்கு அம்மை நோய் கண்டறியப்பட்டதாகவும் அதில், நான்கு பேர் பலியானதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தற்போது கடந்த 15 நாட்களாக தமிழ்நாட்டிலும், கடும் கோடை வெயிலின் காரணத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு  சளித்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக  சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஆனால்,  வைரஸ் தொற்று கவனிக்கப்படாததால் இன்னும் அதிகமான வழக்குகள் பதிவாகாமல் இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.  சளி மட்டுமின்றி,  அம்மை வகைகளான, தட்டம்மை மற்றும் சின்னம்மை போன்ற நோய்களின் அதிகரிப்பு குறித்தும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவர்கள் தெரிவித்தாவது :

“எல்லா பருவங்களிலும் நோய் பரவினாலும், வெப்பநிலை அதிகரிக்கும் போது நோய் பாதிப்பு அதிகரிக்கிறது. எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம். மேலும், தடுப்பூசி போட்டால் ஒருவருக்கு அம்மை நோய் வராமல் தடுக்கலாம். மேலும், பயனுள்ள சிகிச்சை விருப்பங்களும் உள்ளன.

இந்த நோய் சில சமயங்களில் சிசுக்கள், நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தானதாக இருக்கலாம். சில நேரத்தில் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். எனவே, தடுப்பு நடவடிக்கைகள் முக்கியமானது. அனைத்து தோல் புண்களும் குணமாகும் வரை நோயாளிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கலாம்”

இவ்வாறு பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

source https://news7tamil.live/the-summer-heat-has-begun-spreading-measles.html#google_vignette