கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வில் கிடைத்த 5765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும், அதனை மாநில அரசு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை மத்திய அரசு
சார்பில் அகழாய்வு பணியை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா
மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த
பொருட்கள் கிடைத்தன. இந்நிலையில் திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட
மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல்
பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர், 3ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும் படியான
கண்டுபிடிப்புகள் இல்லை என தெரிவித்தார்.
முதல் 2 கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தொல்லியல் அறிஞர்
அமர்நாத் ராமகிருஷ்ணா தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் கீழடியில்
நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை
நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வழக்கறிஞர் கனிமொழி மதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2016 ஆண்டு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கீழடி அகழாய்வு பணிகளை கண்காணிக்கும் அதிகாரியாக மீண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணாவை நியமனம் செய்ய வேண்டும், மேலும் கீழடியில் நடைபெற்ற 2-ஆம் கட்ட அகழாய்வில் 2200ஆண்டு பழமையான 5000-த்துக்கும் அதிகமான பழங்கால பொருட்கள் மத்திய அரசிடம் உள்ளது. அதனை மீண்டும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும், மேலும் அங்கேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்க பூர்வாலா மற்றும் நீதிபதி
தனபால் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் கனிமொழி மதி ஆஜராகி, கீழடியில் மத்திய அரசு அகழய்வு செய்த மோது கிடைத்த 5000க்கும் மேற்பட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும், கீழடி அகழாய்வு பணிகளை கண்காணித்து மேற்கொள்ள அதிகாரியாக அமர்நாத் ராமகிருஷ்ணனாவை நியமனம் செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமர்நாத் ராமகிருஷ்ணா கடந்த 2017ம் ஆண்டு கவுகாத்தி மாற்றம் செய்யப்பட்டு, அதன்பின்பு கோவா, பிறகு சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தென்னிந்திய கோவில்கள் தொல்லியல் கண்காணிப்பாளராக உள்ளார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கீழடி 2 கட்ட அகழாய்வில் மொத்தம் 5,765 பொருட்கள் கிடைத்தன. அவை அனைத்தும் இந்திய தொல்லியல் கண்காணிப்பாளர் சென்னை அலுவலகத்தில் உள்ளது. விரைவில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படும் என வாதம் முன்வைத்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனா சென்னையில் பணியமர்த்தப்பட்டு உள்ளார். அதில் எந்த முடிவும் எடுக்க முடியாது. மேலும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து மத்திய அரசு 9 மாதங்களில் கீழடியில் நடத்திய 2 கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை வெளியிட உள்ளது. 9 மாதங்களில் கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிட்ட பின்பு இந்தியதொல்லியல் துறையிடம் உள்ள 5765 அகழாய்வு பொருட்களை மத்திய அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும், அதனை மாநில அரசு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
source https://news7tamil.live/the-central-government-should-hand-over-5765-excavation-materials-found-in-the-underground-excavation-to-the-tamil-nadu-government-high-court-madurai-branch.html