ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கடந்த 2018-ல் போராட்டம் நடைபெற்றது. இது, பெரும் போராட்டமாக வெடித்தது. போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதாக கூறி காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு ஆலையை மூட உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றமும் ஆலையை மூட உத்தரவிட்டது. 2018, மே 28 முதல் இந்த ஆலை மூடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து, தடை உத்தரவை நீக்கி மீண்டும் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது எனவும், தமிழ்நாடு அரசு ஆலையை மூடி சீல் வைத்தது சரியானதுதான். சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று” எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், தமிழ்நாடு அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது! எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்! என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/supreme-court-decision-regarding-sterlite-plant-is-historic-chief-minister-m-k-stalin.html