தமிழ்நாட்டில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக இருந்த 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வு அரசு
பணியாளர் தேர்வாணையத்தால் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டு, கடந்த 16ஆம் தேதி
தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வு பட்டியலில் அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷீனா, ஸ்ரீ தர்ஷினி, தினேஷ், ஜேசுபாலன் உள்ளிட்டோரால் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும்
கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு, அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களை, பொது பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி இட
ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களை பொது பிரிவில் சேர்த்தும், மீதமுள்ள விண்ணப்பதாரர்களை இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, காலிப் பின்னடைவுப் பணியிடங்களிலும், தற்போதைய காலியிடங்களிலும் சேர்த்து திருத்தி அமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும் எனவும் அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
source https://news7tamil.live/civil-judges-exam-list-canceled-madras-high-court-order.html