செவ்வாய், 12 மார்ச், 2024

இஸ்லாமியரையும் இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் சி.ஏ.ஏ: ஸ்டாலின் கண்டனம்

 

இஸ்லாமியரையும் இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் சி.ஏ.ஏ: ஸ்டாலின் கண்டனம் 12 3 2024 


2019 குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மார்ச் 11ஆம் தேதி மாலை அமல்படுத்தியது. இந்தச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், “அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தை கொண்டுவந்த பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்; குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி தேர்தலில் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர்” என விமர்சித்துள்ளார்.

இது குறித்து மேலும் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் மு.க. ஸ்டாலின், “குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் - இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் #CitizenshipAmendmentAct-ஐ இயற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு.

அதனை @arivalayam உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க.

திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.

அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-has-criticized-that-people-will-teach-bjp-a-lesson-on-caa-4325856