மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசு சொல்லுமா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு கடந்த 8-ம் தேதி ரூ.100 குறைத்தது. இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க் கப்படும் சூழலில், பெட்ரோல் டீசல் விலையையும் தற்போது மத்திய அரசு குறைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் எக்ஸ் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை தலா ரூ.2 குறைக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய விலை மார்ச் 15-ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் மக்களின் செலவு கணிசமாக குறையும். அத்துடன் 58 லட்சம் கனரகவாகனங்கள், 6 கோடி கார்கள்,27 கோடி இருசக்கர வாகனங்களுக்கான எரிபொருள் செலவு குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 663 நாட்களாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்தவித மாற்றம் செய்யப்படாத நிலையில், தற்போது இந்த விலை குறைப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 ஆக இருந்தது. விலைக் குறைப்பை அடுத்து, இது ரூ.92.34 ஆக குறைந்துள்ளது. இதேபோல, ரூ.102.63-க்கு விற்கப்பட்ட பெட்ரோல் ரூ.100.75-க்கு என்ற அளவில் குறைந்துள்ளது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “ பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று கடந்த வாரம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தேன். அது இன்று செய்யப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு (மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால்) விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசு சொல்லுமா?
எல்பிஜி சிலிண்டரின் விலையை பாஜக அரசு ரூ.700 உயர்த்தி, தேர்தலுக்கு முன்பு ரூ.100 குறைத்தது. பெட்ரோல், டீசல் விஷயத்திலும் இதே மாதிரியான கையாடல்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/will-the-government-say-that-the-price-of-petrol-and-diesel-will-not-be-increased-if-the-bjp-comes-to-power-again-p-chidambaram.html