வியாழன், 14 மார்ச், 2024

‘செருப்பு போடவிட மாட்றாங்க என கண்கலங்கிய பட்டியலின பெண்’ – காலணியை மாட்டிவிட்ட ராகுல்காந்தி!

 

செருப்பு அணிய விடுவதில்லை என்று ஆதங்கப்பட்ட பெண்ணுக்கு காலில் செருப்பை மாட்டி விட்ட ராகுல்காந்தியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,  இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.  தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொண்டு இருக்கும் இவர் அங்குள்ள பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து பேசி வருகிறார்.  அந்த மாநிலத்தின் புந்தேல்கண்டில் பயணம் மேற்கொண்டபோது அங்குள்ள பெண்களை சந்தித்து உரையாடினார்.  அப்போது தங்களுக்கு எதிராக நடக்கும் சாதிய கொடுமைகள் பற்றி பட்டியலின பெண் ஒருவர் அழுதுகொண்டே ராகுல் காந்தியிடம் விவரித்தார்.

அப்போது அந்த பெண் கூறியதாவது:

நாங்கள் கிராமத்துக்குள் செருப்பு அணிந்து சென்றால்,  எங்களை கெட்ட சகுனம் எனக் கூறுவார்கள்.  செருப்புடன் கிராமத்துக்குள் ஏன் வருகிறீர்கள் எனக் கேட்பார்கள்.  தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு சென்றால் மணிக்கணக்கில் எங்களை காத்திருக்க வைப்பார்கள்.  தூரமாக போய் உட்கார் என்று துரத்தி அடிப்பார்கள்.  தண்ணீர் கூட எடுக்க விடாமல் எங்களை தடுக்கிறார்கள் சார்.  செருப்பு அணியவும், குடிக்க தண்ணீர் எடுக்கவும்கூட தங்களுக்கு சுதந்திரம் இல்லை.

உயர் ஜாதியை சேர்ந்த மக்கள் தான் இவ்வாறு எங்களை நடத்துகிறார்கள். நாங்கள் எங்கு சென்றாலும் அவர்கள் எங்களை தடுப்பார்கள்.  எங்களை திருமணத்திற்கு வருமாறு அழைப்பார்கள்.  ஆனால் குப்பை தொட்டிக்கு அருகே எங்களை அமர வைப்பார்கள். இல்லாவிட்டால் சாக்கடை அருகே உட்கார சொல்வார்கள்.  நாற்காலியில் நாங்கள் அமர்ந்து உணவருந்தினால் எங்களை அங்கிருந்து விரட்டி அடித்து விடுவார்கள்.

நாங்கள் எப்படி சாப்பிடுவது? இதயம் முழுவதும் எங்களுக்கு துக்கம் மட்டுமே நிறைந்து இருக்கிறது.  நாங்கள் இந்த வழிகளை எல்லாம் சகித்துக் கொண்டோம்.  ஆனால் எங்கள் குழந்தைகளால் இவற்றை தாங்க முடியாது.  எங்களுக்கு எல்லா திசைகளிலும் பிரச்னைகள் இருக்கின்றன.  சுதந்திரமான நாடு என்று இதை சொல்கிறார்கள்.  ஆனால் நாங்கள் இன்னும் மோசமான நிலையிலேயே இருந்து வருகிறோம்.  அனைத்து வகையிலும் நாங்கள் மோசமான வாழ்க்கையை வாழ்றோம்.

என்னை நீங்கள் செருப்பு அணிய அனுமதித்தால் நான் செருப்பு அணிவேன். இல்லாவிட்டால் நான் அதை கையிலேயே வைத்துக் கொள்கிறேன்.” என்று அழுதுகொண்டே கூறினார்.

உடனடியாக,  அந்த பெண்ணின் கையில் இருந்த செருப்பை வாங்கி ராகுல் காந்தி தன் கைகளால் போட்டுவிட்டார்.  மேலும், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஆர்வலர் ஒருவர் ராகுல் காந்தியிடம் கூறுகையில்,  “பண்டேல்கண்ட் மலைப் பகுதியை சுற்றியுள்ள பல கிராமங்களிலும் இதுபோன்ற நிலை இன்னமும் இருக்கிறது. பட்டியலின மக்கள் நிம்மதியாக வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியாத நிலை உள்ளது” எனத் தெரிவித்தார்.  இந்த நிகழ்வை தொடர்ந்து,  அங்கிருந்த பட்டியலின பெண்களுடன் ராகுல் காந்தி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.


source https://news7tamil.live/woman-on-the-list-of-people-who-dont-wear-sandals-congress-mp-who-got-stuck-in-sandals-rahul-gandhi.html#google_vignette