தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியதால் அச்சம்... உச்ச நீதிமன்றம் தலையிட திருமா கோரிக்கை
இது தொடர்பாக வி.சிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென பதவி விலகி இருப்பது தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலவகையில் ஐயத்தையும் அச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது. அவர் என்ன நெருக்கடியில் இந்த சூழலில் பதவி விலகி இருக்கிறார். அவரை அச்சுறுத்தி இருக்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக அவரை பதவி விலகச் சொல்லி இருக்கிறார்களா என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஏற்கனவே, தேர்தல் ஆணையத்தில் ஒரு ஆணையர் இல்லை தலைமை தேர்தல் ஆணையரும் இவரும் இரண்டே பேர் தான் இருந்தார்கள். இப்போது இவரும் பதவி விலகி இருப்பதால் தலைமை தேர்தல் ஆணையர் மட்டும் தான் இருக்கிறார். இன்னும் ஓரிரு நாளில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருந்த நிலையில், இப்படி பதவி விலகி இருப்பது பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் கொடுக்கிறது. உச்ச நீதிமன்றம் இதில் உடனடியாக தலையிட வேண்டும். ஏற்கனவே, நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து குறிப்பாக தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு குழுவில் இந்திய தலைமை நீதிபதி இடம்பெறத் தேவையில்லை என்கிற வகையில் இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கை விரைந்து விசாரித்து, ஓரிரு நாட்களில் அந்த சட்டத்தை தடை செய்து இந்திய தலைமை இந்திய தலைமை நீதிபதியும் இடம்பெறக்கூடிய தேர்வுக் குழுவை உருவாக்கி தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது.
தேர்தல் ஆணையர் அருண் கோயல், கடந்த 2022 நவம்பரில் மோடி அரசின் அழுத்தத்தினால் அவருக்கு விருப்பு ஓய்வு கொடுத்து விட்டு, 24 மணி நேரத்தில் இந்த பதவியிலே நியமனம் செய்யப்பட்டார். ஆகவே, இவர் மோடி அரசுக்கு சாதகமானவர் தான். ஆனாலும், பதவி விலகி இருப்பது ஏன் மோடி அரசை எதிர்த்தா அல்லது மோடி அரசின் சதித்திட்டங்களுக்கு ஒத்துழைப்பதற்கான நோக்கத்தோடு என்கிற கேள்வி எழுகிறது. நேர்மையான முறையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுகிறது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் என்ன சதித் திட்டங்களை தீட்டி இருக்கிறார்களோ என்ற கேள்விகள் எழுகின்றன. பல்வேறு வகையான கேள்விகளை எழுப்புகிற வகையில் அருண் கோயல் அவர்களின் பதவி விலகல் அமைந்துள்ளதால், அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் இதை எதிர்த்து கண்டன குரல்களை பதிவு செய்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் இதில் உடனடியாக தலையிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.” என்று திருமாவளவன் கூறினார்.
தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க கைப்பாவையாக மாற்ற முயற்சி செய்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், “ஏற்கனவே அந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறது என்பதற்கு சான்று தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தேர்தல் ஆணையர்களை நியமிக்க கூடிய தேர்வு குழுவில் இந்திய தலைமை நீதிபதி இடம்பெறத் தேவையில்லை என்கிற வகையில் பிரதமரே கூடுதலாக ஆணையர்களை நியமித்துக் கொள்ளலாம் என்கிற வகையிலே சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட தேர்வுக்குழுவில் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் அடுத்து ஆணையரை நியமிப்பதற்கு பிரதமரே நியமிக்கக் கூடிய வகையில் சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தச் சட்டம் கூடாது அந்த சட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். அந்த சட்டத்தை தடை செய்ய வேண்டும். தலைமை நீதிபதி இந்த குழுவில் இடம் பெற வேண்டும். தலைமை நீதிபதி இடம்பெறுகிற தேர்வு குழுவின் அடிப்படையிலே அந்த குழு தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும். இதுதான் விடுதலை சிறுத்தைகள் இப்போது வைக்கிற கோரிக்கை” என்று திருமாவளவன் தெரிவித்தார். 11 3 24