காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்! – 71 பாலஸ்தீனர்கள் உயிரிழந்த சோகம்! 13 07 2024
காஸா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 71 பாலஸ்தீனர்கள் பலியானதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.
ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரையும் பணய கைதிகளை மீட்கும் வரை காஸா மீதான தாக்குதலை நிறுத்த போவது இல்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 38,000 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் காஸாவின் தென் பகுதியில் கான்யூனிஸில் நேற்று இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காஸா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 71 பாலஸ்தீனர்கள் பலியானதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 289 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“ராணுவத்தின் தெற்கு மண்டலப் பிரிவும் விமானப் படையும் இணைந்து, பொதுமக்களிடையே பதுங்கியிருந்த இரு உயா்நிலை ஹமாஸ் தலைவா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தின. அந்தத் தலைவா்களுடன் பல பயங்கரவாதிகளும் பதுங்கியிருந்தனா். அந்த இடத்தில் ஏராளமான மரங்கள், கட்டடங்கள் அமைந்திருந்தன”
இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தப் பகுதியின் தாக்குதலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய படங்களை தனது பதிவில் இஸ்ரேல் ராணுவம் இணைத்துள்ளது.
source https://news7tamil.live/israel-attack-on-gaza-71-palestinians-are-reported-to-have-died.html