சனி, 13 ஜூலை, 2024

காவிரி ஒழுங்காற்று குழு போட்ட உத்தரவு: கர்நாடக அரசு எடுத்த அதிரடி முடிவு

 Karnataka govt to appeal against Cauvery panel directive on water release to Tamil Nadu Tamil News

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது.

காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு கர்நாடகா இடையே தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது. இந்த பிரச்னையை தீர்த்து வைக்கவே காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டன. தண்ணீர் திறப்பு தொடர்பாக ஒழுங்காற்று குழு பரிந்துரையை, காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்யும்.

இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99-வது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, “தமிழ்நாட்டிற்கு ஜூலை 12 ஆம் தேதி முதல் வரும் 31 ஆம் தேதி வரை நாள் தோறும் 1 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்தது. மேலும், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டி.எம்.சி-யாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், தமிழகத்துக்கு தினமும் ஒரு டி.எம்.சி.அடி காவிரி நதிநீரை இந்த மாத இறுதி வரை திறந்துவிட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் (சி.டபிள்யூ.ஆர்.சி) உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

முதல்வர் சித்தராமையா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், நீர்வளத்துறை அமைச்சர், காவிரி ஆற்றுப்படுகை பகுதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அவர் பேசுகையில், ஜூலை 14-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி மாநிலத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 

“இம்முறை இயல்பான மழை பெய்யும் என்று கணித்திருந்தாலும், இதுவரை 28 சதவீதம் வரத்து பற்றாக்குறை உள்ளது. இது காவிரி ஒழுங்காற்று குழு முன் எங்களின் நிலைப்பாட்டில் தெளிவாகக் கூறப்பட்டது. மேலும், ஜூலை இறுதி வரை எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். அப்படி இருந்தும் ஜூலை 12 முதல் தினமும் ஒரு டி.எம்.சி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு கேட்டுக் கொண்டுள்ளது. 

இந்த உத்தரவை எதிர்த்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் (சி.டபிள்யூ.எம்.ஏ) அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என இன்றைய கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவின் தண்ணீர் பிரச்சினையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. எனவே, அனைத்துக் கட்சிக் கூட்டம் (ஜூலை 14-ம் தேதி) நடத்தப்படும். மத்திய அமைச்சர்கள், மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை, ராஜ்யசபா உறுப்பினர்கள், காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள எம்எல்ஏக்களும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்படுவர். அனைவரின் முடிவுக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு முடிவு செய்யும்.

பிலிகுண்டுலுவில் கபினி அணைக்கு சமமான 5000 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள 4 நீர்த்தேக்கங்களிலும் மொத்தம் 60 டி.எம்.சி அடி நீர் மட்டுமே உள்ளது. விவசாயத்துக்கும் தண்ணீர் வழங்க வேண்டும். எனவே, பற்றாக்குறை மழையை கருத்தில் கொண்டு, ஜூலை இறுதி வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.” என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/karnataka-govt-to-appeal-against-cauvery-panel-directive-on-water-release-to-tamil-nadu-tamil-news-6130951