சனி, 6 ஜூலை, 2024

கொலையுண்ட பி.எஸ்.பி தலைவர்:

 பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்தபோது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட ஆம்ஸ்ட்ராங், அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். அவருடைய தந்தை திராவிடர் கழக நிர்வாகியாக இருந்தவர். அவர் வசித்தவந்த பகுதி முழுவதும் திராவிடர் கழகத்தில் இருந்ததால், ஆம்ஸ்ட்ராங் சிறுவயதில் இருந்தே திராவிட இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அதனால்,  இயல்பாகவே அரசியல் ஆர்வமும் இருந்தது. 

amstrong

அதே நேரத்தில், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் கொள்கைகளாலும் ஈர்க்கபப்டிருந்த ஆம்ஸ்ட்ராங்க், 2006-ல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் எனும் அமைப்பை அப்பகுதி இளைஞர்களுடன் இணைந்து தொடங்கினார். அந்த சமயத்தில் நடந்த மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். 

அந்த சமயத்தில், அந்தப் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இடும்பன் என்பவரின் அறிமுகம் கிடைத்து, பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தில் சென்னை மாநகராட்சியில் 99-வது வார்டில் போட்டியிட்டு மாநகராட்சி கவுன்சிலர் ஆனார். 

ஆனால், ஆம்ஸ்ட்ராங் வெற்றி பெற்றது செல்லாது என நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 6 மாதங்களுக்குப் பிறகு, அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போதுதான், ஆம்ஸ்ட்ராங் பெரிய அளவில் வெளியே தெரிய வந்தார்.

இதைத் தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் மானேவைச் சந்திக்கிறார். ஆம்ஸ்ட்ராங்குக்கு பகுஜன் சமாஜ் கட்சி கொள்கைகள் மீது பிடிப்பு ஏற்பட்டதால், செப்டம்பர் 24, 2007-ல் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து அவருக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

amstrong

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அம்பேத்கரிய அரசியலை மேடைகளில் மிகத் தீவிரமாகப் பேசினார். தமிழ்நாட்டில் முக்கிய தலித் தலைவராக வலம் வந்தார். பல ஏழை எளிய தலித் மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கு பொருளுதவி உள்ளிட்ட பல உதவிகளைச் செய்தவர். தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு என்று குறிப்பிட்ட செல்வாக்கை உருவாக்கியவர் ஆம்ஸ்ட்ராங். தொடர்ந்து 17 ஆண்டுகள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இறக்கும் வரை தொடர்ந்தார்

பட்டியல் இன் மக்களின் சமூக விடுதலை, கல்வியின் அவசியம், அவர்களுக்கு அரசியலமைப்பு அளித்துள்ள உரிமை ஆகியவற்றை மேடைகளில் முழங்கியவர் ஆம்ஸ்ட்ராங். 

தமிழ்நாட்டில் தலித் அரசியலை தீவிரமாகப் பேசிய ஆம்ஸ்ட்ராங், அம்பேத்கரிய வழியில் பௌத்த மதத்தைத் தழுவி பௌத்த நிகழ்வுகளை முன்னெடுத்தார். தலித் அரசியல் இயக்கங்கள் நடத்திய பௌத்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு பேசினார். தமிழ்நாட்டின் வலுவான தலித் அரசியல் தலைவராக வலம் வந்த ஆம்ஸ்ட்ராங், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார்.

தமிழ்நாட்டில் தலித் அரசியல் தலைவர்கள் அனைவரிடமும் நல்ல இணக்கமான நட்பைக்  கொண்டிருந்தார். கன்ஷிராம், மாயாவதி அரசியல் பார்வையில் மற்ற கட்சியினரிடமும் நட்புடன் இருந்து வந்துள்ளார்.

Armstrong 3  

இந்தநிலையில்தான், பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெள்ளிக்கிழமை (ஜூலை 50 மாலை, சென்னை பெரம்பூரில் உள்ள அவருடைய வீட்டுக்கு அருகே வைத்து 6 பேர்கொண்ட கும்பல் சராமரியாக வெட்டியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கே ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைச் சம்பவத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை 10 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கொலை நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி வீடியோக்களை வைத்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, வி.சி.க தலைவர் திருமாவளவன், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: மாயாவதி கண்டனம் 

தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்ப்பதாவது: “தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி) தலைவரான கே. ஆம்ஸ்ட்ராங், அவரது சென்னை வீட்டிற்கு வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது, கண்டனத்திற்குரியது. தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான அவர் மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். மாநில அரசு. குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.” என்று வலிறுத்தியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/bsp-leader-armstrong-murdered-in-chennai-what-his-political-background-5129008