வியாழன், 4 ஜூலை, 2024

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு முகாம்!

 

மாஞ்சோலை மலைகிராம மக்கள் பயன்பெறும் வகையில் மணிமுத்தாறில் சிறப்பு முகாமிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான, மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, மாஞ்சோலை, நாலு முக்கு, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட தேயிலைத் தோட்ட கிராம மக்கள் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று பிபிடிசி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் மாஞ்சோலை அதனை சுற்றியுள்ளப் பகுதிகளை சேர்ந்த மக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.இந்நிலையில் அவர்கள் காலி செய்வதற்கு ஏதுவாக  ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவைகளில் முகவரிகளை மாற்றம் செய்துகொள்ளுவதற்கும், வாழ்வாதாரத்திற்கான லோன் பெறுவதற்கு ஏதுவாக அரசின் சார்பில் மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாஞ்சோலையில் இந்த முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மணிமுத்தாறில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மலை கிராம மக்கள் அங்கேயே குடி இருக்க தங்களுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன வலியுறுத்தி வரும் நிலையில் அரசு சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/special-camp-for-mancholai-plantation-workers-on-behalf-of-the-government.html