எம்.பி.பி.எஸ் அட்மிஷன் ஷாக்: தமிழக முக்கிய கல்லூரியில் 100 சீட்களுக்கு அனுமதி நிறுத்தி வைப்பு
நீட் தேர்வு ரேங்க பட்டியல் வெளியானதை தொடர்ந்து மருத்துவ சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், குமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன் ஆராய்ச்சி மையம் கல்லூரியின் 100 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த தேர்வு ஏற்றுக்கொள்ளப்பட்டு சமீபத்தில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரேங்க் பட்டியல் வெளியான நிலையில், கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி முதல், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
இதில் அரசு ஒதுக்கீடு தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள, 28,819 பேர் மற்றும், நிர்வாக ஒதுக்கீடு தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள 13,417 பேர் ஆன்லைனில் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்வது கடந்த ஆகஸ்ட் 27-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்காலிக இடஒதுக்கீடு விபரங்கள் நேற்று (ஆகஸ்ட் 30) வெளியிடப்பட்டது. இது குறித்து https://tnmedicalselection.net/ என்ற இணையதள பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் இன்று, தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன் ஆராய்ச்சி மையம் கல்லூரி வளாகம் அமைந்துள்ள நிலத்திற்கு உரிமை கோரி, மனுதாரர் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அக்கல்லூரிக்கு அனுமதிக்க்பபட்ட 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த கல்லூரிக்கு, 95 இடங்கள் தற்காலிக இடஒதுக்கீடாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. மீதமுள்ள 5 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது. தற்போது தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 95 இடங்கள் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் 5 பேருக்கும் வேறு கல்லூரியில் இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இடஒதுக்கீடு பெற்றவர்கள் வரும் செப்டம்பர் 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண்டும் என்று, மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.