புதன், 6 நவம்பர், 2024

உத்தர பிரதேசத்தின் மதரசா கல்வி வாரிய சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 

Madharasa act

உத்தர பிரதேச மாநிலத்தின் மதரசா கல்வி வாரிய சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, மதரசா சட்டப்பூர்வமாக கட்டமைக்கப்பட்ட கல்வி வழங்குவதுடன், என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தைக் கடந்து, மத ரீதியான கல்வியை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதியதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 22-ஆம் தேதி வழங்கிய உத்தரவை ரத்து செய்தது. 


முன்னதாக,  உத்தர பிரதேச மாநிலத்தின் மதரசா கல்வி வாரிய சட்டம், மதசார்பின்மை விதிமுறைகளை மீறுவதால் அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி அதை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் மதரசா மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற மாநில அரசுக்கும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மதரசா பள்ளிகள் மற்றும் மதரசாவில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதன்படி, உத்தர பிரதேச அரசு 2004-ல் கொண்டு வந்த மதரச கல்வி வாரிய சட்டம் செல்லும் எனவும் மதரசா சட்டத்தை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு எனவும், சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை மாநில அரசுகள் ஒழுங்குப்படுத்த இயலும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 


source https://tamil.indianexpress.com/india/supreme-court-uttar-pradesh-madrasa-act-7452286