புதன், 6 நவம்பர், 2024

தனிநபருக்குச் சொந்தமான ஒவ்வொரு சொத்தையும் பொது நலன் கருதி கையகப்படுத்த முடியாது - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

 supreme court verdict private property rights material resources community Tamil News

அரசியல் சாசன பிரிவு 39(B) பிரிவின் கீழ் தனியாருக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என்று நீதிபதி கிருஷ்ண ஐயர் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தனியாருக்குச் சொந்தமான சொத்துக்களைக் கையகப்படுத்தி பொது நலனுக்காக பொதுப்பயன்பாட்டுக்கு உபயோகப் படுத்த மாநில அரசுகளுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 39(பி), (சி) அதிகாரமளிக்கிறது. இந்த உரிமையை சட்டப்பிரிவு 31சி பாதுகாக்கிறது. தனியார் சொத்துக்களும் இதில் சட்டப்பிரிவில் அடங்கும் என்பதை 1978 இல் வழங்கப்பட உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உறுதிப்படுத்தியது.

இதை எதிர்த்து, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதன்படி 1986-ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு, வீட்டு வசதி திட்டத்தில் திருத்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி பொது சீரமைப்புக்காக சில குறிப்பிட்ட தனியார் சொத்துகளை அரசு கையகப்படுத்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து மும்பையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 1991-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், ஏழைகளுக்கு வீடு வழங்குவது என்பது அரசின் கடமை என்று கூறி அம்மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 1992-ம் ஆண்டு சொத்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இதர பணக்காரர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டு இதுவரை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த ஏப்ரல் முதல்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று நடந்த வழக்கு விசாரணையில், பொது நலனுக்காகவே இருந்தாலும் அனைத்து தனியார் சொத்துக்களையும் அந்த சட்டப்பிரிவு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில அரசுகள் கைப்பற்ற முடியாது என்று  உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் சாசன பிரிவு 39(B) பிரிவின் கீழ் தனியாருக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என்று நீதிபதி கிருஷ்ண ஐயர் அளித்த தீர்ப்பை  உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, ராஜேஷ் பிண்டல், சதீஷ் சந்திர ஷர்மா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ், பி.வி. நாகரத்னா ஆகிய 7 நீதிபதிகள் இந்த தீர்ப்பை ஆதரித்த நிலையில், அமர்வில் இடம்பெற்ற நீதிபதி சுதான்சு துலியா இந்த தீர்ப்பில் இருந்து மாறுபட்டார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த விசாரணையின்போது , பொது நலனுக்காக தனிநபரின் சொத்தை அரசு கையகப்படுத்த முடியாது என்று கூறுவது ஆபத்தானது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.

Supreme Court



source https://tamil.indianexpress.com/india/supreme-court-verdict-private-property-rights-material-resources-community-tamil-news-7452243