புதுவை அருகே கரையைக் கடந்த ஃபீஞ்சல் புயல்: விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்ச மழை 1/12/24
ஃபீஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் தமிழகத்திலேயே மிக அதிக அளவாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 50 செ.மீ., மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியிருந்த ஃபீஞ்சல் புயல் நேற்று நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது. புயலின் தாக்கத்தால் சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை விடாமல் பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்திலும் விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் மிக அதிக மழை அளவாக 50 செ.மீ மயிலத்தில் பதிவாகி உள்ளது.
மேலும் புதுச்சேரியில் 45.7 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை பதிவான மழை 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.