இன்று (நவ 30) மாலை டெல்லியின் முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஒரு நபர் திரவத்தை வீசி தாக்குதலில் ஈடுபட்டார். தெற்கு டெல்லியின் ஷேக் சராய் பகுதியில் பாத யாத்திரையின் போது இந்த தாக்குதல் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிகழ்வின் போது அமைச்சர் சௌரப் பரத்வாஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பான அறிக்கை ஒன்றை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் மாள்வியா பகுதியில் ஆம் ஆத்மி சார்பாக நடத்தப்பட்ட பாத யாத்திரைக்கு அனுமதி பெறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, “கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும், கான்பூர் டெப்போவைச் சேர்ந்த அசோக் ஜா என்பவர், அரவிந்த் கெஜ்ரிவால் மீது திரவம் வீச முயன்றார். அருகிலிருந்த போலீசார் உடனடியாக அந்நபரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்யும் முயற்சியாக இந்த சம்பவம் அரங்கேறியதாக அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முன்னாள் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாமானிய மக்கள் எங்கே செல்வார்கள் என ஆம் ஆத்மி அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 35 நாள்களில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ள ஆம் ஆத்மி, சம்பவம் குறித்து பா.ஜ.க-வை குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நபர் பா.ஜ.க-வுடன் தொடர்புடையவர் என அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
எனினும், இது போன்ற சம்பவங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மட்டுமே தொடர்ந்து நடைபெறுவதாக பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் விமர்சித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/man-throws-liquid-former-delhi-cm-kejriwal-7661929