ஃபெஞ்சல் புயலால் பெரிய பாதிப்புகள் இல்லை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஃபெங்கல் புயல் வட தமிழக கடற்கரைக்கு அருகில் சுமார் 15 கி.மீ தொலைவிலும், மகாபலிபுரத்திற்கு தெற்கே 50 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே 40 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 90 கி.மீ தொலைவிலும் தற்போது நிலை கொண்டுள்ளது.
இதனால் அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் மணிக்கு 70-80 கிமீ வேகத்திலும், அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரி அருகில் கரையை கடக்க உள்ளது. புயலின் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது;
“சென்னையில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் மிகப்பெரிய பாதிப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறோம். முந்தைய புயல்களைப் போன்று இந்த புயலில் பெரிய பாதிப்பு இல்லை. கட்டுப்பாட்டு அறைக்கு 2648 புகார்கள் வந்தன. அதில் 2624க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 6 மணி முதல் காரைக்கால் – மகாபலிபுரத்திற்கும் இடையே கரையைக் கடந்து வருகிறது.
அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் அவனியாபுரம், மரக்காணத்தில் 25 செ.மீ., மழையும், செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் 25 செ.மீ., மழையும் கொட்டி தீர்த்துள்ளது. சென்னையில் மட்டும் 56 சமையல் கூடங்களில் 2,30,000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கப்படும். சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள 7 சுரங்கப் பாதைகளில் இன்றிரவுக்குள் தண்ணீர் அகற்றப்படும்.
144 நிவாரண மையங்களில் 4904 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் மழைப்பொழிவு குறைந்துவருகிறது. எனினும், தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெறும்” என தெரிவித்தார்.
source https://news7tamil.live/no-major-damage-from-cyclone-fenchal-minister-k-k-s-s-r-ramachandran.html