ஞாயிறு, 1 டிசம்பர், 2024

ஃபெஞ்சல் புயல் எதிரொலி | நாளை 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

 

ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. காற்றின் காரணமாக மின்சார கம்பிகளும் ஆங்காங்கே அறுந்து கிடக்கின்றன. குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் தாழ்வான இடங்களில் வசித்த மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாளை 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

Fengal புயல் காரணமாக ரெட் அலர்ட் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் நாளை(1.12. 2024) 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். நாளை(1.12. 2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும். இதில் சென்னையில் 200 மருத்துவ முகாம்களும் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்கள் என ஆக மொத்தம் 500 மருத்துவ முகாம்கள் நாளை நடத்தப்படும்.

இந்த மருத்துவ முகாம்கள் தேவைக்கேற்ப எண்ணிக்கை அதிகரிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை நடக்கும் மருத்துவ முகாம்களில் காய்ச்சல் – சளி பரிசோதனை , இரத்த கொதிப்பு , நீரிழிவு நோய்க்கான பரிசோதனை போன்ற அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி மருந்துகள், ரத்த கொதிப்பு – நீரிழிவு நோய்க்கான மருந்துகள், உப்பு – சர்க்கரை (ORS) கரைசல், நிலவேம்பு குடிநீர், சேற்றுப்புண் மருந்து போன்ற அத்தியாவசிய மருந்துகள் தேவைக்கு அதிகமாக கையிருப்பில் வைத்துக்கொள்ள மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இருப்பிடங்களுக்கு அருகே அமைக்கப்பட உள்ள இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் கேட்டு கொண்டுள்ளார்.

source https://news7tamil.live/cyclone-fenchal-echo-500-medical-camps-in-7-districts-tomorrow-minister-m-subramanians-information.html