செவ்வாய், 16 டிசம்பர், 2025

14.4 லட்சம் பேர் எஸ்.ஐ.ஆர். படிவம் வழங்கவில்லை

 

ECI

'14.4 லட்சம் பேர் எஸ்.ஐ.ஆர். படிவம் வழங்கவில்லை'... சென்னை வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

பணிகள் நிறைவு மற்றும் கால நீட்டிப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்) கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கின. இப்பணிகளின்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடு வீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை (Enumeration Forms) வழங்கினர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அலுவலர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். 

வாக்காளரிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கணக்கீட்டு படிவங்களையும், விடுபடுதலின்றி ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது; ஏற்கனவே பதிவேற்றம் செய்த படிவங்களில், வாக்காளர் பெயர், 2002ல் இடம்பெற்ற வாக்காளரின் விவரங்கள் சரியாக சேர்க்கப்பட்டிருக்கிறதா என, சரிபார்த்தனர். இறந்தவர்கள், இரட்டைப்பதிவு உள்பட விண்ணப்பம் பெறாத வாக்காளர்களின் படிவங்களை, வழங்கப்படாத படிவங்கள் கணக்கில் சேர்த்து, பி.எல்.ஓ.,க்கள் தங்கள் முதல்கட்ட பணியை நிறைவு செய்துள்ளனர்.

களப்பணிகள் முடிவடையும் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் 2 முறை நீட்டித்தது. அதன்படி, இந்தப் பணிகள் முடிவடைந்தன. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் 100 சதவீதம் திரும்பப் பெற்று, முழுமையாகப் பதிவேற்றம் செய்துவிட்டனர்.

வரைவுப் பட்டியல் வெளியீடு மற்றும் திருத்தத்திற்கான வாய்ப்பு

இந்த பதிவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. வரைவுப் பட்டியல் வெளியான பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் ஒரு மாத கால அளவுக்கு பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும்.

சென்னை மாநகராட்சி நிலவரம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் உள்ள 40 லட்சம் வாக்காளர்களில், 25.6 லட்சம் பேரிடம் இருந்து மட்டுமே பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது சுமார் 64% ஆகும். அதே சமயம், சுமார் 14.4 லட்சம் பேர் எஸ்.ஐ.ஆர் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எஸ்.ஐ.ஆர் படிவத்தை பூர்த்தி செய்யாதவர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் சேரலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/election-commission-alert-144-lakh-chennai-voters-failed-to-submit-ssr-forms-10913118