சனி, 19 நவம்பர், 2016

2.5 லட்சத்திற்கும் மேலாக டெபாசிட் செய்தவர்களிடம் விளக்கம் கேட்கிறது வருமான வரித்துறை

வங்கியில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலுத்தியோரிடம் விளக்கம் கேட்கும் நடவடிக்கையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். கருப்புப் பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அவரவர் வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் இத்தகைய அறிவிப்பிற்கு பின்னதாக, வங்கிகளில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலுத்தியர்வர்களிடம் அது குறித்த விளக்கம் கேட்கும் நடவடிக்கையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த சீதாராம் என்ற நிறுவனம் சார்பில் நான்கரை லட்ச ரூபாய் பணம் ஸ்டேட் பேங்க் ஆஃப் சிக்கிமில் செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அந்த நிறுவனத்திற்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த நிறுவனம் வரும் 25-ம்தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டரை லட்சம் ரூபாய்க்கு அதிமாக செலுத்தப்படும் பணம் குறித்து அளிக்கப்படும் விளக்கம் திருப்திகரமாக இருந்தால் நடவடிக்கைகள் தவிர்க்கப்படும். மாறாக விதிமீறல்கள் இருந்தால், 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

Related Posts: