ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய ரூ. 2,000 நோட்டைப் போலவே அச்சு அசலாக கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கள்ள நோட்டில் ரிசர்வ் வங்கியின் 17 பாதுகாப்பு அம்சங்களில் பாதிக்கு மேல் இருந்ததால், எது அசல் என கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
இந்த நோட்டுகள் அனைத்தும் வங்காள தேச எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர், கடந்த ஜனவரி மாதங்களில் எல்லைப் பாதுகாப்பு படையினர்,தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியோர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டம் அருகே இருக்கும் வங்காளதேச எல்லைப்பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.
புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு, மிக விரைவில் கள்ள நோட்டாக அச்சடிக்கப்பட்டது அதிகாரிகள் மத்தியில் பெரிய அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, எல்லைப் பகுதிகளையும்,மேற்கு வங்காள மாநிலத்தையும் தீவிர கண்காணிப்பில் கொண்டு வர உள்ளனர்.
இது குறித்து மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ போலியாக அச்சடிக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டின் நிறம், வாட்டர் மார்க், சின்னங்கள், சீரியல் நம்பர், என ஏராளமான அம்சங்கள் உண்மையான நோட்டைப் போலவே இருக்கின்றன. உண்மையான நோட்டில் உள்ளதைப் போன்று அச்சடிக்கப்பதற்காக, வெளிநாட்டு பிரத்யேக மை மூலம் இது அச்சடித்து இருக்கலாம் என நினைக்கிறோம்.
ரிசர்வ் வங்கி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டில் குறிப்பிட்ட 17 பாதுகாப்பு அம்சங்களில் பாதிக்கு மேல் போலியான ரூபாய் நோட்டில் இருக்கின்றன. அதாவது, உண்மையான ரூபாய் நோட்டில் முன்பக்கம் 13 பாதுகாப்பு அம்சங்களும், பின்பக்கம், 4 பாதுகாப்பு அம்சங்களும் இருக்கும். பின் பக்கத்தில் இருக்கும் சந்திராயன் விண்கலம், மொழிகள், ஸ்வாச் பாரத் சின்னம், அச்சிடப்பட்ட ஆண்டு ஆகியவை போலியான நோட்டிலும் இருக்கின்றன.
குறிப்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித்படேல் கையொப்பம், தேவநாகிரி எழுத்து,வாட்டர் மார்க் ஆகியவைகள் கள்ளநோட்டில் தெளிவாக இடம் பெற்றுள்ளன. ஆனால், கள்ள நோட்டுகளின் காகிதத்துக்கும், உண்மையான ரூபாய் நோட்டின் காகிதத்துக்கும் வேறுபாடு இருக்கிறது. மெஜந்தா மை பயன்படுத்தி இருப்பதால், கள்ள நோட்டில் பிங்க் வண்ணம் சிறிது அதிகமாக இருக்கிறது. அதேசமயம், பார்வையற்றவர்கள் கண்டுபிடிக்கும் வகையிலான பாதுகாப்பு அம்சம் இல்லை. ஒட்டு மொத்தத்தில் சமானிய மக்கள் கள்ள நோட்டுகளை கண்டுபிடிப்பது மிகக் கடினம். 3 மாதத்துக்குள் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது அரசுக்குஒரு எச்சரிக்கை மணி அடித்தார் போன்றதாகும் என்று தெரிவித்தார்.