2005 ஆம் ஆண்டு டில்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு காஷ்மீரிகளை குற்றமற்றவர்கள் என்று கூறி டில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது. இவர்கள் டில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவினரால் 2005 குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று கூறி கைது செய்யப்பட்டவர்கள்.
இந்த குண்டுவெடிப்பால் 67 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் தாங்கள் செய்யாத குற்றத்திற்காக 11 வருடங்களை சிறையில் இழந்த இந்த இருவரையும் சேர்த்து இந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 69 பேர்கள் எனலாம்.
இவர்கள் மீதான தீர்ப்பில், “இவர்களை இந்த குண்டுவெடிப்புடன் தொடர்பு படுத்தும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இன்னும் குற்றம் சாட்டப்பட்டவரில் ஒருவரான முஹம்மத் ரஃபிக் ஷா டில்லி பேருந்தில் குண்டு வைத்ததாக காவல்துறையினரால் கூறப்பட்ட நாளில் ஸ்ரீநகரில் தனது கல்லூரி வகுப்பில் இருந்துள்ளார்.” என்று நீதிபதி கூறியுள்ளார். இவற்றிற்கான ஆதாரங்களும் உள்ளன. இதில் மிகவும் மோசாமான நிகழ்வு என்னவெனில் இவை அனைத்தும் டில்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினருக்கு தொடக்கத்தில் இருந்தே தெரியும் என்பது தான்.
ரஃபிக் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ரெபெக்கா மாம்மன் ஜான்,”தன்னை குறித்த தகவல்களை தனது பல்கலைகழத்தில் உறுதி செய்து கொள்ளுமாறு ரஃபிக் டில்லி சிறப்பு பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்யும் போது கூறியுள்ளார். மேலும் டில்லி சிறப்பு பிரிவு காவல்துறைக்கு அவர்கள் குறிப்பிட்ட தேதியில் ரஃபிக் அங்கு இருந்ததை அவரது பல்கலைகழகம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆனால் இதனை அவர்கள் நீதிமன்றத்திடம் மறைத்துள்ளனர். பின்னர் ரஃபிக் தானே இந்த தகவல்களை கோரி நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார். இது டில்லி சிறப்புப் பிரிவு காவல்துறை மீதான மிகவும் மோசமான குற்றச்சாட்டு. டில்லி சிறப்பு காவல்துறை இந்த ஆதாரங்களை அவர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன்னரே வைத்திருந்தனர் என்று டில்லி செஷன்ஸ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.” என்று கூறியுள்ளார்.
இது தனி ஒரு நிகழ்வு அல்ல. டில்லி சிறப்பு பிரிவு காவல்துறை விசாரித்த 70% வழக்குகளில் இறுதியில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் அப்பாவிகள் என்று தீர்ப்பு பெறப்பட்டுள்ளது என்று மனிஷா சேதி தனது “கஃப்காலேண்ட் (Kafkaland) புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை விளக்க வேண்டுமென்றால் டில்லி சிறப்பு பிரிவு காவல்துறை அப்பாவிகளை பிடித்து அவர்களுக்கு எதிராக சித்திரவதை மூலம் சாட்சியங்களை புனைந்துள்ளது என்று கூறலாம்.
இது வரை டில்லி சிறப்பு காவல்துறை என்ற ஒரு புலனாய்வு அமைப்பின் உண்மை முகம் பற்றி மட்டுமே நமக்கு தெரியவந்துள்ளது. இஸ்லாமோபோபியா மற்றும் சிறுபான்மையினர் குறிவைத்து வேட்டையாடப்படும் இது போன்ற காலங்களில் இவ்விஷயங்களை குறித்து பேசுவது கடினமானது. இது போன்று அப்பாவிகளை போலியான ஆதாரங்கள் மூலமும், உண்மையான ஆதாரங்களை மறைத்தும் தீவிரவாத வழக்குகளில் போலியாக சிக்க வைக்கும் அதிகாரிகள் அதற்கு குற்றம் பிடிக்கப்பட வேண்டும்.
இதே போன்று கடந்த மே மாதம், தான் செய்யாத குற்றத்திற்காக 23 வருடங்களை சிறையில் கழித்த நிசாருத்தின் அஹமத் என்பவர் விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் பிரபல பத்திரிக்கை ஒன்றிடம் கூறுகையில், “நான் சிறையில் தள்ளப்படும் போது 20 வயதை அடைந்திருக்கவில்லை. இப்போது எனக்கு 43 வயது. கடைசியாக நான் எனது இளைய சகோதரியை பார்த்த போது அவளுக்கு 12 வயது. தற்போது அவரது மகளுக்கு 12 வயதாகிறது. எனது மருமகள் ஒரு வயதுடையவளாக இருந்தாள். தற்போது அவளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. ஒரு தலைமுறையே எனது வாழ்வில் இருந்து விலகிவிட்டது.” என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது, “எங்கள் தந்தை நூருதின் அஹமத் அனைத்தையும் விட்டுவிட்டு நாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப் போராடினார். இறுதியாக 2006 ஆம் ஆண்டு அவர் மரணிக்கும் வரை அவருக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. தற்போது எதுவும் இல்லை. தங்களது இரண்டு மகன்களை சிறையில் தொலைத்த குடும்பத்தின் வேதனையை எவராலும் கற்பனை செய்து கூட பார்க்க இயலாது” என்று ரஃபிக் மற்றும் அவரது சகோதரர் கூறியுள்ளனர்.
தற்போது கேள்வி என்னவென்றால் இது போன்ற உண்மை குற்றவாளிகளை பிடிக்கத் திறன் இல்லாத, ஊழல் கரை படிந்த, சார்பு நிலை கொண்ட பாதுகாப்பு(?) அமைப்புகள் அப்பாவி முஸ்லிம்களின் வாழ்க்கையில் விளையாடுவதை எத்தனை நாட்கள் நாம் அனுமதிக்க முடியும்? ஏன் வேண்டுமென்றே முஸ்லிம்களை குண்டு வெடிப்பு வழக்குகளில் சிக்க வைத்த அதிகாரிகள் மீது அந்த அப்பாவிகளின் வாழ்க்கையை சீரழித்ததற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படக் கூடாது?
தற்போது வெளியான டில்லி நீதிமன்றத்தின் தீர்ப்பு குடிமக்களுக்கு நீதியின் மேலான நம்பிக்கையை நிலைநாட்டும் என்றாலும் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கையையும் இந்த நீதித்துறை எடுக்க வேண்டும்.
http://kaalaimalar.net/kashmir-muslim-prison-11-years/