ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியாவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே ரூ.2000 நோட்டு அச்சடிக்கப்பட்டுவிட்டது என்று கூறப்படும் நிலையில், அப்போது, கவர்னராகவே பொறுப்பு ஏற்காதஉர்ஜித் படேலின் கையொப்பம் எப்படி ரூபாய் நோட்டில் வந்தது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு தடை
நாட்டில் கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். ஏறக்குறைய ரூ.15 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்த பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
புதிய ரூபாய்
அடுத்த சில நாட்களில் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு ரிசர்வ் வங்கியால், புதிய கவர்னர் உர்ஜிட் படேல்கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.
மறுப்பு
புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் எப்போது அச்சடிக்கப்பட்டது?, எவ்வளவு அச்சடிக்கப்பட்டது? என பலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுச் செய்தனர். ஆனால், அதற்கு பதில் அளிக்கரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது.
அறிக்கை
ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியாவதற்கு 6 மாதங்களுக்கு முன் இது தொடர்பாக அரசுடன் ஆலோசிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் அச்சடிக்கப்பட்டது என்று சமீபத்தில் உர்ஜித் படேல் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் பதில் அளித்துள்ளார்.
பொறுப்பு
ஆனால், ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக ஜூலை 19-ந்தேதி நியமிக்கப்பட்டு, செப்டம்பர் 6-ந் தேதி கவர்னராக உர்ஜித் படேல்முறைப்படி பொறுப்பு ஏற்கிறார்.
எப்படி செல்லுபடியாகும்?
கவர்னராக ஒருவர் பதவில் இல்லாத போது, அவர் கையொப்பம் இட்ட ரூ. 2ஆயிரம் நோட்டு எப்படி செல்லுபடியாகும்? என்ற கேள்விகள் எழுந்தன. 6 மாதங்களுக்கு முன்பு அச்சடிக்கப்பட்டது என்றால்,ரகுராம் ராஜன் கையொப்பம் தான் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டில் இருந்துஇருக்க வேண்டும்?.
உர்ஜித்படேல் கையொப்பம் எப்படி வந்தது? இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களும், கருத்துக்களும் பகிரப்பட்டன.
தகவல் அறியும் மனு
இந்நிலையில் தனியார் செய்தி சேனல் ஒன்று ரூ.2 ஆயிரம் நோட்டு அச்சடிக்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதிய 2000, 500 ரூபாய் நோட்டுக்களின் வடிமைப்பை 2016 மே 19ம் தேதி மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்தது. 2016 ஜூன் 7ம் தேதி புதிய ரூபாய் நோட்டுக்களுக்கான வடிவமைப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
2016 ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் பணி தொடங்கியதாகவும், புதிய 500 ரூபாய் அச்சிடும் பணி நவ. 23ல் தொடங்கியதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 22ம் தேதி ரூ.2000 நோட்டுகள் அச்சிட தொடங்கிய நிலையில், செப்டம்பர் 6ல் ரிசர்வ் வாங்கி ஆளுநராக பொறுப்பேற்ற உர்ஜித் படேல் அதில் கையெழுத்திட்டது எப்படி?
நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, புதிய 500 ரூபாய் அச்சிட நவம்பர் 23 வரை தாமதம் ஆனது ஏன்? என்ற கேள்விகளைக் எழுப்பப்பட்டுள்ளது